உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மெர்சலில் கொஞ்சமா அரசியல்: ஆனால், இங்க அரசியலில் மெர்சல் ஆக்கிய இயக்குனர்: விஜய்!

மெர்சல் படத்தில் கொஞ்சமாக அரசியலில் இருந்தது என்றும், ஆனால், இங்கே சர்காரில் அரசியலில் மெர்சல் செய்துள்ளார் இயக்குனர் முருகதாஸ் என்று தளபதி விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் விஜய், துப்பாக்கி மற்றும் கத்தி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து சர்கார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி உள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம், வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இதையடுத்து, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சி என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில், நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான ரசிகர்கள், கல்லூரி மாணவர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும், படக்குழுவினர் கலாந்திமாறன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான் என்று பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தளபதி விஜய், படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் முதல் 2 கட்ட படப்பிடிப்பு முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு நடிகையாக வரலட்சுமி நடிக்கிறார் என்று தெரிவித்தார்கள். சரி, வர்ற லட்சுமியை எதுக்கு வேண்டாம் என்று சொல்லிக்கிட்டு. லட்சுமி வந்தால் நல்லது தானே என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆளப்போறான் தமிழன் தமிழர்களின் அடையாளம், ஒரு விரல் புரட்சி ஒட்டு மொத்த மக்களின் அடையாளம். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு கிடைத்தது, சர்காருக்கே ஆஸ்கர் கிடைத்தது போல உள்ளது. மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது, இதில் முருகதாஸ் அரசியலில் மெர்சல் செய்துள்ளார்.

வெற்றிக்காக எவ்வளோ வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால், ஒருவர் வெற்றியடையக் கூடாது என ஒரு கூட்டமே உழைத்துக் கொண்டிருக்கிறது. உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னுட்டும், கடுப்பேத்தறவங்களுக்கு கம்முனு இருந்தா, வாழ்க்கை ஜம்முனு இருக்கும். இதை வேண்டும்னா உங்கள் வாழ்க்கையில் முயற்சி செய்யுங்கள்.

எல்லோரும் கட்சித் தொடங்கி, பிரச்சாரம் செய்து, தேர்தல்ல நிப்பாங்க, நாங்க சர்கார் அமைத்து தேர்தல்ல நிக்கப்போறோம். படத்தில் முதல்வராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதல்வரானால், முதல்வராக நடிக்க மாட்டேன். நான் முதல்வரானால் லஞ்சம், ஊழல் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். அதை ஒழிப்பது எளிதானதல்ல. அது வைரஸ் போல பரவியுள்ளது. அது கொஞ்சம் கொஞ்சமாகதான் ஒழிக்க வேண்டும்.

மேல்மட்டத்தில் இருப்பவர்கள் ஊழல் செய்வதால், கீழ்மட்டத்திலிருப்பவர்கள் ஊழல் செய்வார்கள். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. தலைவன் சரியாக இருந்தால், கட்சி சரியாக இருக்கும். வாழ்க்கையில் அடிப்பட்டு கீழே இருந்து ஒருவன் மேலே வருவான், அவன் தலைமையில் ஒரு சர்கார் நடக்கும்” என தெரிவித்தார்.