உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

திருநங்கையை திருமணம் செய்த இளைஞனின் உண்மைக் கதை

நிஷாவுடன் நான் வாழ்வது பணத்திற்காக மட்டுமே என்று என் நண்பர்களும், தெரிந்தவர்களும் நினைக்கிறார்கள்.

நிஷா பணம் சம்பாதிக்கிறார், நான் செலவு செய்கிறேன், அதற்காகத்தான் நான் நிஷாவுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது பலரின் நினைப்பாக இருக்கிறது.

ஆனால் உண்மையாக நான் நிஷாவை காதலிக்கிறேன். காதல் என்பது இரு மனிதர்களுக்கு இடையே ஏற்படுவது, இதில் மற்றவர்களின் எண்ணம்தான் எங்களை கஷ்டப்படுத்துகிறது.

நான் ஒரு திருநங்கையோ, திருநம்பியோ அல்ல, ஒரு சாதாரணமான ஆண், ஆனால் என் மனைவி நிஷா ஒரு திருநங்கை.

திருநங்கைகளிடம் கணிசமான அளவு பணம் இருக்கும் என்றே அனைவரும் நினைக்கிறார்கள்.

திருநங்கையாக வாழ்வது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்; குடும்ப பொறுப்புக்கள் இல்லை, மனம் போக்கில் ஜாலியாக வாழ்கிறார்கள் என்றே அனைவரும் கருதுகிறார்கள்.

ஆனால் இது முற்றிலும் தவறானது. உண்மை என்ன தெரியுமா?

நானும், நிஷாவும் பத்து அடிக்கு பத்து அடி அளவுள்ள ஓர் அறையில் வசிக்கிறோம்.

இரவு நேர மெல்லிய வெளிச்சத்தில் சுவற்றில் இருக்கும் லேசான குங்குமப்பூ நிறத்தை பார்ப்பது எனக்கு பிடிக்கும். இவ்வாறு இயல்பான ஆசைகளைக் கொண்ட ஆண் நான்.

ஒரு 'டோலக்'கும் (கையால் இசைக்கும் வாத்திய கருவி, மிருதங்கம் போன்றது), ஒரு துர்கை அம்மன் சிலையும் மட்டுமே எங்களின் சொத்து. துர்கைக்கும், டோலக்குக்கும் நிஷா பூஜை செய்வார். இதைத்தவிர படுத்துக் கொள்ள படுக்கை ஒன்று இருக்கிறது.

எங்கள் இருவருக்கும் உள்ள உறவைப் பற்றி குடும்பத்தினருக்கே சொல்லி புரிய வைக்க முடியாதபோது, உலகத்தில் உள்ளவர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள்? அப்படியே புரிந்து கொண்டாலும் என்ன பயன் இருக்கிறது?

எனவேதான், நானும் நிஷாவும் குடும்பத்தினரைப் பற்றியும், எங்கள் உறவு பற்றியும் வெளியே யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.

நிஷாவை பார்க்கும்போது, ஒரு கதாநாயகியை பார்ப்பதுப் போலத்தான் எனக்குத் தோன்றும். பெரிய கண்கள், மனதைக் கவரும் சிவப்பு நிறம், நெற்றியில் பெரிய பொட்டு... 12 ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர்களாக அறிமுகமானோம்.

அப்போது நிஷாவின் பெயர் பிரவீன். இருவரும் ஒரே பகுதியில் வசித்தோம். முதல் முறையாக பிரவீனை சந்தித்தபோது, பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.

நான் ஆறாவது வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிட்டேன். படிக்க வேண்டியதன் அவசியத்தை என் குடும்பத்தினர் எனக்கு கடுமையாக வலியுறுத்தினாலும், படிப்பது எனக்கு வேப்பங்காயாக கசந்தது.

என்னை ஒரு ஹீரோவாக பாவித்துக் கொண்டேன். படித்தவன் மட்டும்தான் வாழ்வானா? படிக்காதவனுக்கு திறமை இல்லையா என்று போதித்த 'தவறான' நட்புகளும், பார்த்த திரைப்படங்களும் என்னை ஒரு கதாநாயகனாகவே உசுப்பேற்றி, உருவேற்றின.

அன்று என்னை சுற்றி இருந்தவர்களின் கருத்துக்கள் என்னை அதிகமாக ஈர்த்தன. "வாழ்க்கை என்பது வாழ்வதற்கே, 'படிச்சவன் பாட்டை கொடுத்தான், எழுதுனவன் ஏட்டை கொடுத்தான்'" என்பது போன்ற வார்த்தைகள் என்னை கவர்ந்தன.

அப்பாவின் புத்திமதியும், அம்மாவின் கெஞ்சலும், அண்ணனின் அறிவுரையும் அந்த நேரத்திற்கு சரியாக இருப்பதாக தோன்றும்.

ஆனால், நண்பர்களை பார்க்கும்போது பேசாமல் இருக்க முடியாது. அவர்களிடம் பேசும்போது மனம் மாறிவிடும்.

"வீடுன்னு இருந்தா அட்வைஸ் மழை பொழிவாங்க, அதையெல்லாம் நினைச்சு கவலைப்படக்கூடாது. கவலைப்படறவன் எல்லாம் என்னத்தை கிழிச்சுட்டான்? படிச்சுட்டு, எவனோ ஒருத்தனுக்கு அடிமையா வேலை செய்யறதுதான் வாழ்க்கையா?" என்பது போன்ற வார்த்தைகள் எனது மந்த புத்திக்கு தூபம் போட்டன.

சொந்தத் தொழிலே வாழ்க்கைக்கு நல்லது என்ற முடிவில், திருமணத்திற்கு சென்று பாட்டு பாடி பணம் சம்பாதிக்கும் சில நண்பர்களுடன் சேர்ந்து செல்வேன்.

(வட இந்தியாவில் டோல் என்ற வாத்தியக் கருவியை இசைத்துக் கொண்டு திருநங்கைகள் சுபகாரியங்களுக்கு சென்று பாடுவார்கள், அவர்களுக்கு பரிசு கொடுக்கப்படும், இது பாரம்பரிய திருமணங்களில் ஒரு சடங்காகவே கருதப்படுகிறது.)

'தவறான நட்பு' என இன்று நான் குறிப்பிடும் உறவுகள்தான் அன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அவர்களின் வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருந்தன.

ஏனெனில் அவர்கள் எதற்கும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் குடும்பத்தினர் எப்போதும் அதைச் செய், இதைச் செய்யாதே என்று சொல்வது எரிச்சலாக இருக்கும்.

16 வயதிலேயே எனக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டேன். பிரவீன் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

நாங்கள் இருவரும் வயதுக்கு வராதவராக இருந்தோம், ஆனால் காதலித்தோம். அவன் ஆணா, பெண்ணா என்பது எனக்கு எந்தவொரு நேரத்திலும் பெரிய விஷயமாக இருந்ததில்லை.

அதேபோல்தான் அவனுக்கும்... நான் ஆண் என்பது அவனுக்கு எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அவன் தன்னை அழகுபடுத்திக் கொள்வதோ அல்லது பெண்ணைப் போல நடந்துக் கொள்வதோ என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

நான் அவனை பார்க்கும்போது அவன் பேண்ட்-சட்டை போட்டுக் கொண்டு ஆணைப் போல்தான் இருப்பான்.

ஒரு பெண்ணுடனான உறவு எப்படி இருக்கும் என்பது எனக்கு பிரவீனுடன் பழகுவதற்கு முன்பே தெரியும். ஏனெனில், பிரவீனை சந்திப்பதற்கு முன்னர் ஒரு பெண்ணுடன் இரண்டு வருடங்களாக பழகிக் கொண்டிருந்தேன். அந்த பெண் என்னைவிட எட்டு வயது பெரியவள். அவருக்கு திருமணம் ஆனதும் எங்கள் உறவு முறிந்து போனது.

பிரவீனுடன் இருப்பது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியை கொடுக்கிறது. வீட்டில் நான் கணவன், பிரவீன் என்கிற நிஷா எனது மனைவி. நிஷா சிறு வயதில் இருந்தே தன்னை ஆணாக உணரவில்லை, பெண்ணாகவே உணர்ந்தார். அதனால்தான் அவர் மனைவி, நான் கணவன், வேறு எந்த காரணமும் இல்லை.

மேக்கப் செய்வது நிஷாவுக்கு மிகவும் பிடிக்கும். 12வது படிக்கும்போதே காது குத்திக் கொண்டு, முடி வளர்க்க ஆரம்பித்தாள். அதுவரை நிஷாவுக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.

ஆனால் தங்கள் மகன் ஓரினச் சேர்க்கையாளர் என்றும், என்னுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்பதும் பிரவீனின் குடும்பத்தினருக்கு தெரியவந்தபோது பூகம்பம் வெடித்தது.

பிரவீனை கயிற்றில் கட்டி வைத்து கண்மூடித்தனமாக அடித்தார்கள். இந்த குடும்ப வன்முறை ஒரு நாளோடு நின்று விடவில்லை... தொடர்கதையானது...

பிரவீனை வீட்டிலேயே அடைத்துவைத்தார்கள். தண்ணீர், மின்சார வசதி இல்லாத மொட்டைமாடி அறைக்குள் வைத்து பூட்டி விட்டார்கள்.

பிரவீன் என்னைவிட நன்றாக படித்தவர். படிப்பது எப்போதுமே நல்ல வாழ்க்கையைத் தரும், வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற அம்மாவின் வார்த்தைகள் என் காதில் ஏறவேயில்லை.

ஆனால் எனக்கு மிகவும் பிடித்தவர் நன்றாக படித்தது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் நன்றாக படித்த பிரவீனின் வாழ்க்கையை மாற்ற படிப்பு உதவவில்லை.

'ஓரின சேர்க்கையாளர்களுக்கு வேலை கிடையாது; திருநங்கைகளுக்கு வேலை கிடையாது', என்பது போன்ற வார்த்தைகள் பிரவீனை விடாமல் துரத்தியது.

இந்த ஒரே காரணத்தால் மட்டுமே, தனது பெயரை நிஷா என்று பெயரை மாற்றிக் கொண்டு திருநங்கைகளின் குழுவில் இணைந்தான் பிரவீன். வாழ்வாதாரத்திற்கான வேறு எந்த வழியும் எங்களுக்கு தெரியவில்லை.

திருநங்கைகளின் குழுவின் சேர்ந்தால், திருமணங்களிலும், சுப நிகழ்ச்சிகளிலும் சென்று ஆடிப் பாட வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

அதற்கு பதிலாக அவர்கள் கொடுக்கும் சன்மானமே, எங்களுக்கு சோறு போடும் என்பதும் புரிந்தது.

'டோல்' வாத்தியத்தை எடுத்துக் கொண்டு நிஷா அந்தத் தொழிலில் இறங்கிய நாளை என்னால் மறக்கவே முடியாது. கைகளை தட்டிக் கொண்டு, டோலை இசைத்துக் கொண்டு திருநங்கையர்களின் குழுவில் ஒருவராக அதீதமான அலங்காரத்தில் நிஷாவாக பிரவீன் சென்றதை பார்த்தபோது மனது வலித்தது.

நிஷாவின் குடும்பத்தினரும் சமூகமும், நிஷாவை, அவரது உணர்வை மதித்து ஏற்றுக் கொண்டிருந்தால், அவரது வாழ்க்கையே மாறியிருக்கும். வேறு வழியில்லாமல் கட்டாயத்திலேயே அவர் இந்தத் தொழிலில் இறங்கினார்.

ஒருவரின் பாலின உணர்வும், உள்ளார்ந்த விருப்பங்களும் சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், அவர்கள் இயல்பாக வாழலாம்.

நிஷாவை பிறர் ஏற்றுக் கொள்ள மறுத்தது எனக்கு ஆத்திரத்தை கொடுத்தது. ஆனால் அதை என்றுமே அவமானமாக நான் கருதவில்லை.

பெண்ணாக இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அது அவரது தெரிவு. பிரவீனின் பெயரை நிஷா என்று திருநங்கை குழுவின் தலைவர்தான் மாற்றியமைத்தார்.

நிஷாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட எல்லா மாற்றங்களிலும் நான் அவளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறேன். அவரது அப்பாவும், அண்ணனும் பல முறை அடித்து துவைத்திருக்கின்றனர்.

நிஷாவின் தாய் இறந்தபோது, சடங்கு சம்பிரதாயம் என்று சொல்லி மொட்டை அடிக்கச் சொல்லி கட்டாயபப்டுத்தினார்கள்.

அதை கேட்க மறுத்த நிஷா, "முடியை துறப்பது பெரிய விஷயம் இல்லை, என் மன உணர்வுகளை துறக்க முடியாது என்பதை உறுதியாக தெரிவிப்பதுதான் அதன் காரணம்" என்று சொல்லிவிட்டாள்.

அதற்கு பின் சில தினங்களிலேயே நாங்கள் திருமணம் செய்துக் கொண்டோம். எங்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

திருமண பதிவு அலுவலகத்திற்கு சென்று திருமணப் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னோம். "திருநங்கைகளின் திருமணத்தை பதிவு செய்யமுடியாது" என்று சொல்லிவிட்டார்கள்.

நிஷா, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டால் திருமணத்தை பதிவு செய்யலாம் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் திருமணத்தை பதிவு செய்யவேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தபோது, அவசியம் இல்லை என்று உறுதியாக முடிவெடுத்துவிட்டோம்.

எனவே, எங்கள் திருமணத்திற்கு எந்தவிதமான ஆவணப் பதிவுகளோ அல்லது சட்டபூர்வ அங்கீகாரமோ இதுவரை கிடைக்கவில்லை.

திருமணம் செய்துக் கொள்வதற்கான சட்டபூர்வமான வாய்ப்புகள் இல்லாத எங்களைப் போன்ற பல தம்பதிகளை உதாரணமாக சொல்ல முடியும்.

என்னையும் நிஷாவைப் போல் 25 திருநங்கைகள்-ஆண் ஜோடியினர் தம்பதிகளாக வாழ்கிறோம். அந்த 25 கணவன்களில் 10 பேருக்கு வேறு பெண்களுடன் திருமணமும் ஆகியிருக்கிறது, குழந்தைகளும் இருக்கின்றன.

ஆனால் அவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே திருநங்கை மனைவிகளுடன் வசிப்பார்கள். பிற நாட்களில் தங்கள் குடும்பத்தினருடன் தங்கிவிடுவார்கள்.

என் மனைவி நிஷா எனக்காக மாங்கல்ய நோன்பு இருப்பாள். நன்றாக அலங்காரம் செய்துக் கொண்டு நான் எப்படி இருக்கிறேன் என்று வெட்கத்துடன் கேட்பாள்.

ஆனால், நான் கணவன் என்பதால், உலக வழக்கில் பிற ஆண்கள் செய்வதைப் போல என் பேச்சைத்தான் நிஷா கேட்டு நடக்கவேண்டும் என்ற வழக்கம் எங்களுக்கு இடையில் இல்லை.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை திருநங்கைகளின் குழுவினர் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்வார்கள்.

அப்போது திருநங்கையர்கள் தங்களின் துணையோடு கலந்துக் கொள்வார்கள். நிஷாவுக்கும் எனக்கும் இந்த விருந்துக்கு போவது மிகவும் பிடிக்கும். நாங்கள் அனைவருடம் ஆடிப்பாடி, விருந்து உண்டு மகிழ்வோம்.

நிஷா அங்கு திருநங்கையாக அல்ல, ஒரு பெண்ணாக, என் மனைவியாக பார்க்கப்படுவாள் என்பதே எங்களின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

திருநங்கைகள் பிறரை சீண்டுவதையும், கெட்ட வார்த்தைகளில் திட்டுவதையும், கைத்தட்டி பேசுவதையும், உரத்த குரலில் சண்டையிடுவதையும் பலமுறை பார்த்திருக்கிறேன்.

ஆனால் நிஷா என்னுடன் இருக்கும் போதும், வெளியில் செல்லும்போதும், திருநங்கைகள் ஏற்பாடு செய்யும் விருந்துகளுக்கு செல்லும்போதும், அதுபோல் நடந்துக் கொள்ளமாட்டாள்.

என்னிடம் அவளுக்கு அன்பும் பாசமும் மட்டுமல்ல, வெட்கமும் இருக்கிறது. என்னை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

உண்மையில், நிஷாவிடம் ஆணின் வலிமையும் உண்டு, பெண்ணின் மென்மையும் உண்டு. இருவரில் யாருக்கு அதிக பலம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று நாங்கள் இருவரும் வீட்டில் பல பரிட்சை செய்து விளையாடுவோம்.

வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும். ஆனால், உண்மையில் நிஷாவை ஜெயிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை நான் நிதர்சனமாக உணர்ந்திருக்கிறேன்.

எனக்கு நண்பர்களாக இருந்த பலர், நிஷாவின் கணவனாக அறியப்பட்ட பிறகு, ஒவ்வொருவராக என்னிடம் இருந்து விலகிவிட்டார்கள். காரணம் என்ன தெரியுமா? அவர்களுக்கும் திருநங்கைகளை அறிமுகம் செய்து வைக்கவேண்டுமாம்... காரணம்? அன்பா இல்லை காதலா?

காமம் ஒன்றே அவர்களின் குறிக்கோள். நான் எதாவது சொல்லி மறுத்தால், நீ மட்டும் எதற்கு நிஷாவுடன் இருக்கிறாய் என்று என்னிடம் கேள்வி கேட்டு என்னை மட்டம் தட்டுவதாய் நினைப்பார்கள்.

அவர்களுக்கு உண்மையிலுமே திருநங்கைகள் மீது மதிப்போ, மரியாதையோ, காதலோ, அன்போ இல்லை. அவர்களை ஒரு பாலியல் பொருளாகவே பார்க்கிறார்கள். ஆனால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, எனவே எனக்கு இப்போது நண்பர்களே இல்லை.

திருநங்கைகள் குழுவின் தலைவர் என்னை அவரது மருமகனாகவே பாவித்து மரியாதை கொடுப்பார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி என்னை திருமணம் செய்துக் கொண்ட நிஷா, அதன்பிறகு இன்றுவரை தன்னுடைய குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ளவில்லை.

நிஷாவுக்கு அப்பா மற்றும் அண்ணன்களின் முகத்தைக்கூட பார்க்க பிடிக்கவில்லை. திருநங்கையாக இருந்தால் குடும்பத்தின் சொத்திலும் பங்கு கிடையாது அல்லது கிடைக்காது, குடும்பத்தினரிடம் எந்தவித உரிமையையும் கோரமுடியாது.

நிஷாவின் தந்தையின் சொத்துக்களில் அவளது இரண்டு சகோதரர்களுக்கும் பங்கு கிடைக்கும், ஆனால், கூடப்பிறந்த நிஷா என்னும் பிரவீனுக்கு எதுவும் கிடைக்காது.

என் குடும்பத்தினரும் என்னைப் பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்ப்பார்கள். நிஷாவை விட்டு வெளியே வந்தால்தான் என்னுடன் பேசுவேன் என்றும் பல உறவினர்கள் நேரிடையாகவே கூறியிருக்கிறார்கள்.

ஆனால் நான், நிஷாவை விட்டு விலகவில்லை; அப்படிச் சொல்லும் உற்றார் உறவினர்களிடம் இருந்து விலகிவிட்டேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்தினர் எனக்கு கொடுக்கும் அழுத்தம் என்ன தெரியுமா? ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துக் கொள் என்பதுதான்.

ஒரு பெண்ணுடன் திருமணம் செய்துக் கொண்டு, இயல்பான வாழ்க்கை அமைந்துவிட்டால் என்னுடைய உலகமே மாறிவிடும் என்று நினைக்கிறார்கள்.

எனக்காக மூன்று பெண்களையும் பார்த்தார்கள். இந்த விளையாட்டு இனியும் தொடரக்கூடாது என்பதற்காக, திருமணம் செய்துக் கொண்டாலும், நிஷாவும் என்னுடனே இருப்பாள். நாங்கள் இருவரும் ஒருபோதும் பிரியமாட்டோம் என்ற நிபந்தனையை விதித்தேன்.

மறுபுறம், திருமணம் என்ற பேச்சு வந்தாலே நிஷாவுக்கு பயம் வந்துவிடும். நான் அவளை விட்டு பிரிந்துவிடுவேனோ என்ற அச்சத்தில் துவண்டு விடுவாள்.

நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்வேனோ என்ற அச்சத்தோடு, வேறு சில அச்சங்களும் அவளுக்கு ஏற்படும். எனவே பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிப்பாள்.

அவளது இதுபோன்ற செயல்களைப் பார்த்தால் எனக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும், மறுபுறம் பாவமாகவும் இருக்கும்.

மரணத்தின் இறுதி நாட்களின் என் அம்மா சொன்ன வார்த்தைகள் இன்னும் என் மனதில் இருக்கிறது.

"மகனே, இது ஒரு சுழல். இதில் மூழ்கிவிடாதே. இதெல்லாம் இளமைக் காலத்துடன் முடிந்துவிடும். குடும்பம் என்பது ஒரு பெண்ணால்தான் அமையும். நம் குடும்பத்திலேயே கடைசி மகன் நீ. எனது காலத்திற்கு பிறகு உன்னை யாரும் கவனித்துக் கொள்ள மாட்டார்கள் திரும்பி வந்துவிடு" இதுதான் அம்மாவின் கடைசி வார்த்தைகளாக இருந்தது.

உண்மையில் அம்மாவின் வார்த்தைகளின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. ஆனால், அம்மாவின் வருத்தம் தோய்ந்த வார்த்தைகளுக்கு அப்போது நான் சொன்ன பதில் என்ன தெரியுமா? "அம்மா, இது மனதின் குரல், என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை..." (இதைச் சொல்லிவிட்டு விஷால் அழுதுவிட்டார்)

அம்மாவின் மரணத்திற்கு பிறகு யாருமே என்னிடம் முகம் கொடுத்துக்கூட பேசவில்லை. இப்போது ரத்தம் சூடாக இருக்கும் திமிரில் ஆடுகிறாய், வயதாகும் போதுதான் உனக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பது புரியும் என்று எல்லோரும் கரித்துக் கொட்டுவார்கள்.

நான் நிஷாவை காதலிக்கிறேன். எங்களுக்கு இடையில் இருப்பது தூய்மையான காதல். நான் காதலிப்பது பெண்ணா அல்ல திருநங்கையா என்பதில் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை என்னும்போது, மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை?

இந்த காதலுடனே எங்களால் வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். நிஷாவை எனக்கு பிடித்திருக்கிறது. எனக்கு இரண்டு ஆசைகள் இருக்கின்றன.

இப்போது இருக்கும் வீட்டைவிட சற்று பெரிய வீடு வாங்கவேண்டும், அதில் நாங்கள் ஓரளவாவது வசதியாக வாழவேண்டும்.

அடுத்த ஆசை, ஒரு குழந்தையை தத்தெடுத்து நல்ல முறையில் வளர்த்து திருமணம் செய்துக் கொடுக்கவேண்டும்.

எங்கள் திருமணத்திற்கு என்னால் செலவு செய்யமுடியவில்லை. எங்களுக்கு மாப்பிள்ளை அழைப்போ, திருமண விருந்தோ நடக்கவில்லை என்ற ஏக்கம் எங்களுக்கு இருக்கிறது.

ஆனால் குழந்தையை தத்தெடுப்பது பற்றி நிஷாவால் சரியான முடிவெடுக்க முடியவில்லை. அவளுடைய பயங்களும், தயக்கங்களும் அவளை தடுக்கின்றன. எங்களது சூழலில் ஒரு குழந்தையை பொருந்திப் போகச் செய்வது அவ்வளவு சுலபமானதல்ல என்று அவள் நினைக்கிறாள்.