Trending News...

டிவி திருத்த வந்தவனால் பாலியல் தொல்லை. தீக்குளித்த இளம்பெண்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே வீட்டில் டிவியை பழுது பார்க்கச் சென்ற உறவினர், பாலியல் தொல்லை கொடுத்ததால், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சிசிடிவி காட்சிகள் கிடைத்தும், சம்பந்தப்பட்ட இளைஞர் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கிள்ளியூர் வாழபழஞ்சி விளையைச் சேர்ந்தவர் எம்.ஏ பட்டதாரி பிபிஷா (22). இவர் கடந்த 11ந்தேதி, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 2 குழந்தைகளின் தந்தையான ராஜேஷ் என்பவரிடம், வீட்டில் டிவி பழுதாகி இருப்பதாகவும், மெக்கானிக்கை அழைத்து வரும்படியும் கூறி இருக்கிறார்.

மெக்கானிக்கை அழைத்து வருவதுபோல வெளியே சென்று வந்த ராஜேஷ், தானே சரி செய்து தருவதாகக் கூறி பிபிஷாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது எதிர்பாராத நேரத்தில், ராஜேஷ் திடீரென பிபிஷாவை முத்தமிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

பிபிஷா சப்தம் போட்டு அலறியதால் அங்கிருந்து ராஜேஷ் வெளியே சென்றுவிட்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த அவர், மீண்டும் பிபிஷாவை வீட்டிற்கு வெளியே அழைத்து கொலைமிரட்டல் விடுத்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

இதையடுத்து அச்சம் அடைந்த பிபிஷா, வீட்டிற்குள் சென்று தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பிபிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டின் முன் குவிந்தனர்

60 சதவீத தீக்காயத்துடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிபிஷாவிடம், கடந்த 16 ஆம் தேதி நாகர்கோவில் மாஜிஸ்திரேட் மருத்துவமனைக்கு வந்து வாக்குமூலம் பெற்றார்.

சம்பவம் குறித்து பிபிஷாவின் உறவினர்கள் ராஜேஷ் மீது எந்தவொரு வழக்கும் பதிவுசெய்யாமல் இருந்ததால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்பு சமாதானமாகி சென்றுள்ளனர்.