உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

குரங்கிடம் பஸ்சை ஓட்ட கொடுத்த ஓட்டுனர். வேலைக்கு வேட்டு

கர்நாடகாவின் தாவணகெரேவில்  உள்ள அரசு கேஎஸ்ஆர்டிசி பஸ் டெப்போவில் பேருந்து ஓட்டுனராக வேலை செய்து  வந்த ஒருவர், கடந்த அக்டோபர் 1ம் தேதி தாவணகெரே மாவட்டம் பரமசாகரா-ஆலேகல்லு  மார்க்கத்தில் பஸ்சை ஓட்டிச் சென்றார். நடுவழியில் ஒரு பஸ்  நிறுத்தத்தில் அவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் அருகில் உள்ள மரத்தில் உட்கார்ந்து இருந்த குரங்கு திடீர் என்று பஸ்சுக்குள் தாவி ஏறியது. முதலில் ஓட்டுனரின் மடி மீது அமர்ந்தது. பின்னர் ஸ்டியரிங் மீது உட்கார்ந்து கொண்டது. குரங்கை பார்த்தவுடன் அதை  விரட்டி அடிக்காமல் ஓட்டுனர் ஆர்வத்துடன் குரங்கை அதன் இஷ்டத்துக்கு  விட்டு விட்டார். இதனால் குரங்கு சுதந்திரமாக பஸ்சை இயக்க தொடங்கியது. பஸ் இப்படியும், அப்படியுமாக தாறுமாறாக ஓடியது.

இதனிடையே மேலும் உற்சாகம் அடைந்த ஓட்டுனர், குரங்கை தடவி கொடுத்து குஷிப்படுத்தினார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியும், பயமும் ஏற்பட்டது. கத்தி கூச்சலிட்டு டிரைவரை எச்சரித்தனர். அதன்பிறகு பஸ்சை டிரைவர் நிறுத்தி குரங்கை விரட்டினார். அதன்பிறகு பயணிகள் நிம்மதி பெருமூச்சுடன் பயணித்தனர். இதற்கிடையே ஓட்டுனருக்கு புத்தி புகட்டும் வகையில் பஸ் பயணி ஒருவர், குரங்கு பஸ் ஓட்டும் காட்சியை தனது செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். வைரலாக பரவிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டுனரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.