Trending News...

எந்தப் போட்டோவையும் அனிமேஷனாக மாற்றலாம்... Adobe Max 📷

சமீபத்தில் நடந்துமுடிந்த மேக்ஸ் நிகழ்வைப் பார்த்தால், அடோப் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டது போல இருக்கிறது.

அடோப் நிறுவனத்தின் வருடாந்தர விழாவான 'அடோப் மேக்ஸ்' சமீபத்தில் நடந்துமுடிந்தது. இதில் வருங்காலத் திட்டங்கள், புதிய வசதிகள் எனப் பல விஷயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மற்ற வருடங்களைவிட இந்த வருடம் அடோப் அறிமுகப்படுத்தியுள்ள வசதிகள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாகவே இருக்கின்றன. இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு போட்டோஷாப் மற்றும் தங்களது கிரியேட்டிவ் மென்பொருள்களுக்குத் தேவையான முக்கிய அப்டேட்களை செயற்கை நுண்ணறிவின் (AI) வசதியுடன் கொண்டுவரவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டான வசதிகள் பற்றி பார்ப்போம்.

ஏற்கெனவே இருக்கும் மென்பொருள்களுடன் ப்ரீமியர் ரஷ், புராஜெக்ட் ஜெமினி என இவ்வருடம் புதிதாக மென்பொருள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. சமூக வலைதளங்களில் பதிவிடும் வீடியோக்களை எடிட் செய்யவென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது இது. ப்ரீமியர் ரஷ், மொபைல், டெஸ்க்டாப் என இரண்டிலும் வெளிவரவுள்ளது. தொழில்முறை வீடியோ எடிட்டர்களுக்கு இருக்கும் ப்ரீமியர் புரோவின் வசதிகளில் சிலவற்றைக் கொண்டுள்ள இது எல்லோரும் எளிதாகப் பயன்படுத்தும்படி இருக்கும். மேலும் டச் ஸ்கிரீன்களில் டிஜிட்டலாக வரைவதற்கு புராஜெக்ட் ஜெமினி அறிமுகப்படுத்தப்பட்டது. இது தவிர தயாரிப்பில் இருக்கும் சில முக்கிய வசதிகளைப் பற்றியும் அடோப் தெரிவித்தது.

PROJECT MOVING STILLS 
சாதாரண போட்டோ ஒன்றை சிறிய அனிமேஷனாக மாற்றித்தரும் இந்த வசதி. தற்போது இருப்பதைப்போல சாதாரணமாக ஒரு போட்டோவை ஜூம் மட்டும் செய்யாமல், உண்மையில் அந்த இடத்தில் கேமரா முன் பின் நகர்ந்தால் எப்படி இருக்குமோ அதை அப்படியே செயற்கை நுண்ணறிவு மூலம் கொண்டுவருகிறது இது. இதை வைத்து அசத்தலான போட்டோ ஸ்லைடுஷோக்கள், சிறிய GIF-கள் எனப் பலவற்றை உருவாக்கமுடியும். அடோப் சென்ஸெய் என்னும் செயற்கை நுண்ணறிவின் மூலம் இது சாத்தியமடைந்துள்ளது. இது தனியாக வெளிவருமா இல்லை போட்டோஷாப் உடன் ஒரு வசதியாக வருமா என்பது அறிவிக்கப்படவில்லை.

PROJECT KAZOO
இது கொஞ்சம் ஜாலியான வசதி. நீங்கள் பாடுவதைக் கொண்டு சரியான நோட்ஸை கண்டுபிடித்து ஓர் இசைக்கருவியைக் கொண்டு அதை வாசித்துக் காட்டும் இது. சொல்லப்போனால் இனி உங்கள் வாயாலே இசைவாத்தியங்களை வாசிக்க முடியும். சொல்லப்போனால் பல வித்தியாசமான இசைக் கருவிகளைக் கொண்டு இசை அமைக்கவே முயற்சி செய்யலாம். மற்றும் பிட்ச் மாற்றுவது என மற்ற ஆப்சன்களும் இதில் இருக்கின்றன.

PROJECT SMOOTH OPERATOR
இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் ஸ்டோரி பதிவு செய்யும்போது வெர்டிகள் வீடியோவாகத்தான் அது பதிவாகும். ஆனால், பொதுவாக நாம் ஹரிஸாண்டல் வீடியோதான் எடுத்திருப்போம். இதனால் வீடியோவில் இருக்கும் முக்கியமான தகவல்கள் மறைந்து போகும். சொல்லப்போனால் எதைப் பதிவிட நினைக்கிறோமோ அதுவே மறைந்துபோக வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க வீடியோவை பொறுமையாக க்ராப் செய்து வீடியோவில் நடக்கும் நகர்வுகளுக்கேற்ப க்ராப் செய்யப்படும் இடங்களை மாற்ற வேண்டியதும் இருக்கும். இதைத் தொழில்முறை வீடியோ எடிட்டர்களால்தான் சரியாகச் செய்ய முடியும். இதை எளிமைப்படுத்தவே இது வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஒரு வீடியோவை இந்த மென்பொருளிடம் கொடுத்து எந்த aspect ratio வேண்டும் என்று குறிப்பிட்டால் போதும். இந்த மென்பொருளில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு வீடியோவில் இருக்கும் முக்கியமான விஷயத்தை ட்ராக் செய்து நாம் குறிப்பிட்ட aspect ratio-வில் வீடியோவை நமக்குத் தரும்.

PROJECT FONTPHORIA
இதுவும் சுவாரஸ்யமான ஒரு வசதிதான். போட்டோவில் இருக்கும் வார்த்தை ஒன்றை செலக்ட் செய்து அதில் இருப்பதைப் போலவே முழு ஃபான்ட் ஒன்றையே இதன்மூலம் உருவாக்க முடியும். ஓர் எழுத்து இருந்தால்கூட அதை வைத்து மீதி 25 எழுத்துகளை இதுவே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிவிடும். மேலும் லென்ஸ் மோடில் கேமராவில் நேரடியாக ஒரு வார்த்தையைக் காட்டினால் அதை நீங்கள் விரும்பும் ஃபான்ட்டுக்கு இதுவே மாற்றி கேமராவில் காட்டும்.

பேக்கரியில் இருக்கும் ஃபோல்டு செய்யக்கூடிய பாக்ஸ்களுக்கு எளிதாக டிசைன் செய்ய Project Fantastic Fold, வீடியோவில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மட்டும் ட்ராக் செய்து வெளியே எடுக்கும் Project Fast Mask என இன்னும் பல வசதிகள் இந்த விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஐபேடுக்கு போட்டோஷாப் விரைவில் வருமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிசைனர்கள் இப்போதே இந்த வசதிகளுக்குப் பெரிய தம்ப்ஸ் அப் கொடுத்துள்ளனர்.