இலங்கை மசாஜ் நிலையங்களில் விபச்சாரம். 17 விடுதிகள், 59 பேர் கைது.

கம்பஹா மாவட்டத்தின் பல பிரிவுகளில் நேற்று (17) பகல் 12 மணியிலிருந்து இரவு 8 மணிவரையான 8 மணித்தியாலங்கள் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது, ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட 17 விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதுடன், 59 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்தின் வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிநடத்தலின் கீழ் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

களனி, கம்பஹா, நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளை மையப்படுத்தி, நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவுக்கமைய இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த 17 விடுதிகளிலிருந்தும் 8 முகாமையாளர்கள், 42 பெண்கள், 9 ஆண்கள் உள்ளடங்களாக 59 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் நிட்டம்புவ, வேயாங்கொட, ஜா-எல, பியகம, நீர்கொழும்பு, வத்தளை, கம்பஹா, யக்கல ஆகிய பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19- 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் இன்று (18) கம்பஹா, நீர்கொழும்பு, மஹர, அத்தனகல்ல, வத்தளை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.