37 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த பயிற்சியாளர்: வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல்

தன்னிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த 37 சிறுமிகளை பயிற்சியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

தென்மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த 34 வயதுடைய அந்த நீச்சல் பயிற்சியாளர், சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகள், 4 முதல் 12 வயதுடைய அந்த சிறுமிகளை நீச்சல் குளத்தில் வைத்தும் உடைமாற்றும் அறையில் வைத்தும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், அந்த நபருக்கு Baden-Baden உள்ளூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

அந்த நபர் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததோடு, பெற்றோரிடம் கூறினால் அவர்களைக் கொன்று விடுவதாகவும், 5 வயதுள்ள இரண்டு சிறுமிகளை மிரட்டியுள்ளார்.

நீச்சல் குளத்தில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தபோது அந்த பயிற்சியாளர் எடுத்த சில வீடியோ காட்சிகள் சாட்சியமாக நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டன. ஜேர்மனி தனியுரிமை சட்டங்களின்படி பெயர் வெளியிடப்படாத அந்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நபர் தனது செயல்களுக்காக வருத்தம் தெரிவித்ததோடு மன்னிப்பும் கோரினார்.

என்றாலும் அவரது குற்றத்தின் தீவிரத்தன்மையை மனதில் கொண்டு, அவர் தனது தண்டனைக் காலத்தை முடித்தாலும் அவரை காவலிலிருந்து விடுவிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.