குழந்தை பிறக்காததால் கணவனை பிரிந்த மனைவி: ஆத்திரத்தில் பறிபோன 3 உயிர்கள்...திடுக்கிடும் பின்னணி

தமிழகத்தில் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி தனது மனைவி, மாமியாரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை அருகே உள்ள போத்தனூரை சேர்ந்தவர் பாபு (48). இவர் மனைவி சுமதி (42).

தம்பதிக்கு குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் விரக்தி அடைந்த சுமதி, பாபுவை பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தாய் விசாலாட்சி (68) யுடன் வசித்து வந்தார்.

இதனால் சுமதியிடம் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு பாபு அழைத்தார். அதற்கு சுமதி மறுத்ததுடன் விவாகரத்து கேட்டு வக்கீல் மூலம் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த பாபு, நேற்று நள்ளிரவு மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது விசாலாட்சி கதவை திறந்த நிலையில், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து அவர் கழுத்தை அறுத்து பாபு கொன்றார்.

பின்னர் தடுக்க வந்த மனைவி சுமதி கழுத்தையும் அறுத்து கொலை செய்தார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று அதிகாலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமதியின் அண்ணன் பிரகாஷ் வெளியே வந்த போது வீட்டின் வெளியே ரத்தம் சிதறி கிடந்தது.

இதனால் பதறி போன அவர் வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு விசாலாட்சி, சுமதி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், பாபு தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.