காதலை மறுத்த இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்ட பரிதாபம்.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு பிரியங்கா (வயது 19) என்ற மகளும், இசக்கி (17) என்ற மகனும் உள்ளனர்.

பிரியங்கா பி.எஸ்சி. படித்து முடித்து விட்டு, வங்கி பணிக்கான பயிற்சி வகுப்பிற்கு அடிக்கடி நெல்லைக்கு சென்று வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த இசக்கிமுத்து (21) என்பவர் பிரியங்காவை ஒருதலையாக காதலித்து வந்தார். காதலை ஏற்க பிரியங்கா மறுத்ததால், அவரது முகத்தை இசக்கிமுத்து பிளேடால் கிழித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்பிறகு இசக்கிமுத்து வேலைக்காக சென்னை சென்று விட்டார். அங்கிருந்தும் அடிக்கடி செல்போனில் பிரியங்காவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு இசக்கிமுத்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செல்போன் மூலம் பிரியங்காவை தொடர்பு கொண்டு மீண்டும் தனது காதலை ஏற்க கூறியதாக தெரிகிறது. அவரது காதலை ஏற்க பிரியங்கா மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து நேற்று காலை பிரியங்காவின் வீட்டிற்கு சென்றார். அங்கு பிரியங்காவும், அவரது தம்பி இசக்கியும் தூங்கிக்கொண்டு இருந்தனர். இசக்கிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரியங்காவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பிரியங்காவுக்கு கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு இசக்கி ஓடி வந்து தடுக்க முயன்றார். அப்போது இசக்கியும் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் அவரும் படுகாயம் அடைந்தார்.

உடனே இசக்கிமுத்து தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த 2 பேரையும் உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய இசக்கிமுத்துவை வலைவீசி தேடி வருகிறார்கள்.