யாழில் ”கஜா” வின் கோர தாண்டவம்!! பாடசாலைகள் விடுமுறை!!

வசந்தபுரம் அராலி வீதி நவாந்துறை கொட்டடி பண்ணைவீதி சோனகத்தெரு பொம்மைவெளி பகுதியில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளதுடன் நவாந்துறை பகுதி இராணுவ முகாம் காற்றினால் பகுதிஅளவில் சேதமடைந்துள்ளது.

எனினும் காற்றின் வேகம் இப்பகுதியில் தணியவில்லை என்பதுடன் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது.

மேலும் வீதிகளில் ஆங்காங்கே சிறிய மரங்கள் முறிந்து சாய்ந்து காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம் உள்பட வடக்கின் பல பகுதிகளில் கஜா புயலின் தாக்கத்தால் அடுத்த 6 மணித்தியாலங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காலநிலை சீரின்மை காரணமாக பாடசாலைகளில் இன்று தவணைப்பரீட்சைகளை நடாத்த வேண்டாமென அறிவிக்கப்படுகின்றது.வினாத்தாள் பொதிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும்.அடுத்த திகதி பின்னர் அறிவிக்கப்படும் என மாகாணக் கல்விப் பணிப்பாளர்தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள காலநிலை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தால் வடமாகாண கல்விப்பணிப்பாளருடன் உரையாடப்பட்டது.

அனர்த்த முகாமத்துவ பகுதியினரிடம் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் தொடர்புகொள்ளப்பட்டபோது காலை 9.00 மணியுடன் புயலின் பாதிப்பு நீங்கிவிடும் என பதிலளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மூன்றாம் தவணை பரீட்சை மாகாண ரீதியாக நடைபெறுவதால் – தகவல் அவசரமாக சென்றடையாது – பரீட்சை வினாத்தாள் ஏதோவொரு பாடசாலையில் வெளியானால் ஏற்படவுள்ள நெருக்கடி நிலையும் தோன்றியுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் குறிப்பிட்டார்.

மாகாண ரீதியாக நடைபெற்றுவரும் பரீட்சைகள் – பரீட்சைகளுக்கான மாணவரின் வரவின்மை ஏற்படல் – சாதாரண குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களின் ஒழுக்கு மற்றும் வெள்ளப்பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களால் பரீட்சைக்கு தோற்றமுடியாது ஏற்படும் மாணவர்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் குறிப்பிட்டிருக்கிறோம்.

இவ்விடயம் தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளருடன் ஆலோசிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கஜா புயலின் தாக்கம் நீடிப்பதால் வடக்கு மாகாண பாடசாலைகள் இன்று மூடப்படும் என்று மாகாண ஆளுநர் றெஜினோல் குரே அறிவித்துள்ளார்.

கஜா புயல் காரணமாக யாழ்ப்பாணம் உள்பட்ட வடக்கின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை நீடிப்பதால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது பரீட்சைகள் நடைபெறுவதால் பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையிலேயே ஆளுநரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.