மாவீரர் நாளன்று தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை!

மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படும் தினமான எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம், மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், குழப்பங்கள் விளைவிக்கப்படக் கூடும் என்ற காரணத்தினால் அன்றைய தினம் நடைபெறும் தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் திட்டமிட்டுள்ளதனால் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பில் பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அதிகளவான பாடசாலை மாணவ மாணவியர் எதிர்வரும் 27ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் கல்விப் பணிப்பாளரின் இந்தக் கோரிக்கைக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, போரில் உயிர் நீத்த தங்களது சொந்தங்களை நினைவு கூர்வதில் பிழையில்லை என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.