தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான மாவீரர்நாள் அறிக்கை வெளியாகியுள்ளது.

மாவீரர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருகிறார்கள் என்னும் தமிழீழ மக்களின் நெஞ்சில் ஆழப்பதிந்த நெருப்பு நினைவோடுதான் மாவீரர் நாளை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய் நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம் உயிர் வீரர்களை நாம் நினைவுகூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அன்னிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது மாவீரர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

மாவீரர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருகிறார்கள் என்னும் தமிழீழ மக்களின் நெஞ்சில் ஆழப்பதிந்த நெருப்பு நினைவோடுதான் மாவீரர் நாளை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகின்றோம்.

நாம் நினைத்து வணங்குவதற்குரியவர்களாக மட்டுமல்ல, நாம் மண் பற்றை மறவாது பின்பற்றுவதற்குரியவர்களாகவும் மாவீரர்கள் திகழ்கிறார்கள்.

2000 ஆண்டுகால தமிழீழ வரலாற்றில் நிலைத்த நடுகல் வழிபாட்டின் தொடர்;ச்சியே இதுவாகும். தாய்மண்ணின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் தாங்கி, அவர்கள் கனவு நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையோடு அவர்களை ஈன்ற பெற்றோர்களையும், குடும்பத்தினரையும் இப்புனித நாளில் போற்றுகிறோம்.

எமது தேசம் விடுதலை பெற்று எமது மக்கள் சுதந்திரமாகத் தன்மானத்துடன் இறையாண்மை பெற்ற தமிழீழத்தில் வாழவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை போற்றுகின்ற நாள் இதுவாகும்.

சிங்களப் பேரினவாத அரசு, தொடர்ந்து 70 ஆண்டுகால தமிழீழ மக்களின் அறப்போராட்ட, ஆயுதப்போராட்ட வரலாற்றில், தமிழீழ மக்கள் வைத்த கோரிக்கைகளிலோ, தமிழீழ மக்களின் நலன் குறித்து இந்திய அரசு வைத்த கோரிக்கைகளிலோ அல்லது உலக நாடுகள் வைத்த கோரிக்கைகளிலோ ஒன்றையேனும் இதுவரை ஏற்றதில்லை.

அதுமட்டுமல்ல, தமிழீழ மக்களுக்காக அவ்வப்போது தான் வழங்கிய வாக்குறுதிகளைக்கூடச் சிங்களப் பேரினவாத அரசு நிறைவேற்றியதில்லை.

மூன்று தசாப்த காலமாக எமது போராட்டம் எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றதோடு உலகவரலாற்றிலேயே எந்தவொரு விடுதலைப் போராட்டமும் கொண்டிராத உயரிய ஒழுக்கத்துடனான முப்படைப் பரிணாமங்களையும் நடைமுறை அரசையும் உயர்ந்த தியாகங்களால் எமது தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டலில் பெற்றுக்கொண்டு எமது விடுதலைப் போராட்டம் பயணித்தது.

அடிக்குமேல் அடி வாங்கி இழப்புகளைச் சந்தித்த சிங்கள தேசம் சர்வதேசத்திடம் மண்டியிட்டது. எமது விடுதலைப் போராட்டத்தின் உண்மைத்தன்மையை மறைத்து பொய்ப்பிரச்சாரத்தின் மூலம் சர்வதேச நாடுகளின் உதவியைப் பெற்று தமிழினப் படுகொலையை அரங்கேற்றியது.

இலங்கை பேரினவாத அரசானது, பாதுகாப்பு வலையம் என அறிவித்ததை நம்பி அவ்விடங்களை நோக்கிப் பாதுகாப்புத் தேடிவந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்களை வயது, பால் வேறுபாடின்றி கனரக ஆயுதங்கள், சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட இரசாயனக்குண்டுகள் மற்றும் கொத்துக்குண்டுகள் என்பவற்றைப் பயன்படுத்தி படுகொலை செய்தது.

படுகாயமடைந்த பொதுமக்களுக்கான சிகிச்சை வழங்கிய வைத்தியசாலை, பாடசாலை போன்ற பொது இடங்களையும் மனிதநேயமற்ற முறையில் கண்மூடித்தனமாக தாக்கியழித்தது.

அத்துடன் சர்வதேச சட்டவிதிகளுக்கமைய அனைத்துலக குமூகத்தின் ஆலோசனையுடன் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போராளிகளையும் படுகொலைசெய்தது. இதன் காரணமாக எமது ஆயுதப்போராட்டம் 18மே 2009 இல் மௌனிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதும் சிங்களப் பேரினவாத அரசின் ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரப்பட்டு தமிழ் மக்கள் அனைவரும் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, அடிப்படை தேவைகள் மறுக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என படுகொலை செய்யப்பட்டனர்.

இதேவேளை சரணடைந்த பொதுமக்களும், கைது செய்யப்பட்ட போராளிகளும் பல சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டதோடு வலிந்து காணமலும் ஆக்கப்பட்டனர்.

சர்வதேசத்தின் அழுத்தங்களினால தடுப்பு முகாம்களில் இருந்த தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுவதாகக் கூறிய சிங்கள அரசு இன்றும் தமிழ் மக்களின் சொந்த இடங்களில் புதிய படைமுகாம்களையும், பாதுகாப்பு வலையங்களையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையுமே செய்து வருகிறது.

தமிழர்களின் முக்கிய வாழ்வாதாரங்களான கடற்தொழிலையும், விவசாயத்தையும் திட்டமிட்டுப் பறித்து,அவர்களை அவர்களது பூர்வீக நிலத்தை விட்டு வெளியேற்றுவதனூடாக தனது திட்டமிட்ட தமிழின அழிப்பைத் தொடர்கிறது.

சிங்களக் காடையர்களை வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் களமிறக்கி, அரசமரங்கள்நின்ற இடமெல்லாம் புத்த விகாரைகள் அமைத்து, அங்கெல்லாம் போதனைக்கு என்ற பெயரிலும், பராமரிப்புக்கு என்ற பெயரிலும் நூற்றுக்கணக்கான சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றித் தமிழர் தாயகத்தைச் சிங்கள தேசமாக மாற்றும் திட்டத்தை சிறீலங்கா அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அத்தோடு, இலங்கை ஆட்சியாளர்களின் இனவெறியாட்டம் முற்றுப்பெறவில்லை. சிங்கள அரச படைகள் மூலம் தமிழர் தாயகம் எங்கும் மாணவர்களிடத்திலும், சிறுவர்களிடத்திலும் மது,போதைப் பொருள் என்பவற்றைப் பாவிக்கத் தூண்டி தமிழ் மக்களின் முக்கிய மூலதனமாகிய கல்வியைச் சீரழித்து கலாசாரத்தையும் சிதைத்து தனது கொடிய இன அழிப்பினை சிங்களப் பேரினவாத அரசுமேற்கொண்டு வருகின்றது.

அன்பார்ந்த மக்களே!
பூமிப்பந்தில் ஈழத் தமிழ் இனம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்ற போதும் நாம் பெரும் வலிமைவாய்ந்த ஒரு தேசிய இனம் என்பதை அறிவோம். தனித்துவமான மொழியையும், பண்பாட்டு வாழ்வையும், வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம் ஈழத்தமிழினம்.

இப்படியான எமது அருமை பெருமைகளை எல்லாம் அழித்துத் தமிழீழத் தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்து விட்டு இராணுவப் பலத்தால் சிங்களப் பேரினவாதம் தனது ஆதிக்கத்தைத் திணித்துவிடத் துடிக்கிறது.

இவ்வாறான அடக்குமுறைகளையும், கலாச்சாரச் சீரழிவுகளையும் தகர்த்தெறிந்து தமிழரின் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கவும் விடுதலைப்பற்றுடன் ஒழுக்கம் நிறைந்த தமிழ் குமுகாயத்தைக் கட்டியெழுப்பவும் அனைத்துத் தமிழ் பற்றாளர்களும், சான்றோர்களும், பெற்றோர்களும், இளைய தலைமுறையினரும், ஊடகங்களும் விழிப்புணர்வோடு செயற்பட வேண்டும்.

வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதி சிங்களமயப்படுத்தப்படுகின்ற அதே வேளை, புலம்பெயர் கட்டமைப்புக்களை முடக்கும் நோக்கத்தோடு சிறீலங்காப் புலனாய்வாளர்களும், தமிழ்த் தேச விரோத சக்திகளும், புலம்பெயர் நாடுகளில் ஊடுருவித்தமிழ்த் தேசிய கட்டமைப்புகளைச் சிதைத்து தமிழ் மக்களைக் கூறுபோடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழரின் ஒருமைப்பாட்டை இவர்கள் சீர்குலைத்து வருவதனால் 2009ற்கு முன் செயற்பட்டுக் கொண்டிருந்த தேசிய கட்டமைப்புக்களை வலிமைப்படுத்தி, அரசியல் பணிகளையும் தமிழின அழிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்சார் பணிகளையும் முன்னெடுக்க எம் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களின் இளைய சந்ததியினர் எமது அமைப்பின் ஒன்றிணைந்த இளையோர் பேரியக்கமாக இயங்கி வருகிறார்கள்.

தமிழீழத் தாயகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றானது தொடருகின்ற எமது விடுதலைப் பயணத்தில் அவர்களது காலடிச் சுவடுகளை ஆழப்பதியச் செய்துள்ளது. அவர்களின் பல்துறையாற்றல் எமது விடுதலையை விரைவுபடுத்தும் என்பது திண்ணம்.

சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றி நாம் மேற்கொண்ட இன விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்து இன்று ஐரோப்பிய மேன்முறையீட்டு நீதிமன்றமும், சுவிஸ் நாட்டு உச்ச நீதிமன்றமும் எமது அமைப்பை விடுதலை இயக்கமாக ஏற்றுக்கொண்டதைப் போன்று ஏனைய நாடுகளும் எம் மீது விதித்த தடையை நீக்க வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.

சிங்களப் பேரினவாத அரசின் பயங்கரவாத இனப்படுகொலையாளிகளை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென உலகத் தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் அவையும், மனித உரிமைகள் ஆணையகமும் அவர்களது ஆய்வுகளை மேற்கொண்டு இலங்கையில் போர்க்குற்றங்கள், மனிதநேயத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் படுகொலைகள் என்பவற்றுடன் சர்வதேச சட்ட மீறல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்பதை உறுதிசெய்துள்ளன.

இதன் அடிப்படையிலேயே அனைத்துலகத்தின் ஒத்துழைப்புடன் ஒரு நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென 2015இல் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், அதற்கு மாறாகச் இலங்கை அரசு, இது உள்நாட்டு விவகாரம் என்றும், அதனால் சர்வதேச விசாரணை சாத்தியமற்றது என்றும், உள்நாட்டு மனித உரிமை ஆணைக்குழு மூலமே போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையத்தை வலியுறுத்தியது.

இதனடிப்படையில் சிறீலங்கா அரசாங்கத்தை நீதி விசாரணைக்கு உட்படுத்தும் பொருட்டு மனித உரிமைகள் ஆணையகம் சிறீலங்காவுக்கான கால அவகாசத்தினை எதிர்வரும் மார்ச் 2019 வரை கொடுத்துள்ளது.

இந்தக் காலக் கெடுவிலிருந்து தப்பிக்கவும் அனைத்துலக குமூகத்தை மீண்டும் ஏமாற்றும் நோக்குடனும் இலங்கையில் அரசியல் நெருக்கடி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இன்னுமொரு கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளது சிங்களப் பேரினவாதம்.

ஐ.நா. சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழீழ மக்களின் அடிப்படை சனநாயக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதையும், இப்பெரும் பொறுப்புச் சர்வதேசத்திற்கே உரியது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.

இனப்படுகொலை நிகழ்ந்த முள்ளிவாய்க்காலுக்குப் பின்பும், தமிழினத்தை அழித்தொழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு சிங்கள ஒடுக்குமுறை தொடர்கின்ற நிலையிலும், தமிழீழத்தில் ‘நல்லாட்சி’ நிலவுவதாய் வெளிப்படையாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருவது மட்டுமல்ல, அது முழு ஆதரவை சிங்கள ஆட்சியாளருக்கு வழங்கியும் வருவது தமிழ் மக்களின் நம்பிக்கைகளுக்குத் துரோகம் இழைக்கும் செயலாகும்.

சிறீலங்காவின் ஒடுக்குமுறை அரச பீடத்தில் அரசாங்கங்கள் மாறுகின்றன, தலைவர்கள் மாறுகின்றார்கள். இத்தலைவர்கள் இந்திய சார்பு நிலைக் கொள்கையிலிருந்து அவ்வப்போது மாறித் தடம்புரள்வதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாட்சித்தலைமைகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, 2008ஆம் ஆண்டு மாவீரர்நாள் உரையில் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ‘என்றென்றும் தமிழீழம் இந்தியாவின் நட்பு நாடாகவே விளங்கும்’ என்று கூறியதையும் எமது இந்திய சார்புநிலை உறுதிப்பாட்டையும் இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பிராந்திய சூழலில் தமிழீழத்திற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

அதுவே இந்தியாவினதும்,ஈழத் தமிழர்களினதும் நலன்களுக்கு உகந்தது எனக் கருதுகிறோம்.

தமிழர் தாயகப் பகுதியைச் சூழ்ந்திருக்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை ஈழத் தமிழர்களால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதையும்,ஈழத் தமிழர்கள் இந்திய இறையாண்மைக்கு ஆதரவு சக்தியாக எப்போதும் இருப்பார்கள் என்பதையும் கருத்திற் கொண்டு எம் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என இந்திய அரசைவேண்டிநிற்கின்றோம்.

அன்பார்ந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளே!
தமிழீழத்தின் அறவழிப் போராட்டக் காலத்திலும் சரி, ஆயுதப் போராட்டக் காலத்திலும் சரி, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு இதுவரை நீங்கள்அரசியல் ஆதரவும், பொருளாதார உதவியும் வழங்கினீர்கள். இனிவரும் காலங்களிலும் எமது விடுதலையின்தேவைகளை உணர்ந்து, தமிழீழத்தை வென்றெடுப்பதற்காக அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் உதவிகளை நிறைவோடு வழங்கிட வேண்டும் என உங்களை அன்போடு வேண்டுகிறோம்.

உலகெங்கும் பரந்து வாழும் அன்பிற்குரிய தமிழ் மக்களே!

எங்கள் மாவீரர்களினதும் மக்களினதும் அர்ப்பணிப்பினாலும், எமது தாயக, தமிழக மற்றும் புலம்பெயர் மக்களின் தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்களாலும் இன்று சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்பட்டு வருகின்றன.

எமக்கு நீதியும் விடுதலையும் கிடைப்பதற்கான வேளை அண்மிக்கும் நிலையில் தாயகத்தில் சிங்களத்தின் பிடிகளில் பல ஆண்டுகளாக நில விடுவிற்பிற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டு பிடிப்பதற்கும், தமிழக்; கைதிகளின் விடுதலைக்காகவும் எழுச்சி கொண்டுள்ளனர்.

எம் தாயக மக்களுடன் தமிழ்நாட்டு மக்களும், புலம்பெயர் மக்களும் அறவழிப்போராட்டங்களை நிகழ்த்துவதனூடாக சிங்கள அரசின் பொய்முகத்தினை சர்வதேசத்திற்கு உரத்துக்கூறி எமது விடுதலையை வென்றெடுக்க இப்புனித நாளில் உறுதி எடுப்போம்.

எத்தகைய சவால்களிற்கு முகம் கொடுக்க நேர்ந்தாலும், எத்தனை இடையூறுகள் எதிர்ப்பட்டாலும், எத்தனை சக்திகள் எம்மை மோதினாலும்நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம்.

வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அன்னிய ஆக்கிரமிப்பு அகன்று தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் வரை எமது மாவீரர் காட்டிய பாதையில் நாம் தொடர்ந்து போராடுவோம்.

இந்த வரலாற்றுச் சூழமைவில் தமிழர் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்தக் கோடியில் வளர்ந்தாலும் தேச விடுதலைக்கு உறுதியாகக் குரல் எழுப்பி எமது விடுதலை இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’