அடுத்த வாரம் இலங்கையைத் தாக்க பேத்தை புயல்.

வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான கஜா புயல், தமிழகத்தைவிட்டு நகர்ந்து இன்று மாலை அரபிக் கடலை அடைகிறது.

தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8ஆம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது.

இது மேலும் வலுவடைந்து கஜா புயலாக கடந்த 11ஆம் திகதி உருவெடுத்தது. இப்புயல் இன்று அதிகாலை தமிழகத்தின் கரையைக் கடந்தது.

தற்பொழுதைய நிலவரப்படி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் வரும் நாளை மறுதினம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறது. இது 19ஆம் திகதி தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது நவம்பர் 20 அல்லது 21ஆம் திகதி இந்து சமுத்திரத்தை கடப்பதால் தமிழம் மற்றும் இலங்கை முழுவதும் மழையுடனான கால நிலை நிலவும். இந்தக் காற்றழுத்த தாழமுக்கம் சற்று வலுவடைந்து புயலாக மாற்றமடையுமானால் அதற்கு பேத்தை (phethai) என்ற பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பெயர்தான் பேத்தை. கடந்து சென்ற கஜா புயல் என்ற பெயர் இலங்கை சார்பில் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வானிலை ஆய்வு மையம் கஜா என்று அழைத்தது.

பெயர் வைப்பது ஏன்?

புயல்களைப் பற்றிய எச்சரிக்கைத் தகவல்களை எளிமையாக்கும் வகையில் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியக் கடற்பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது.

ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகி, அதுபற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கும் வகையில், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் புயல்களுக்கு தலா 8 பெயர்களை பரிந்துரை செய்வார்கள்.

ஒவ்வொரு புயல்களுக்கும் வரிசையாக ஒவ்வொரு நாடும் பரிந்துரைத்த பெயரை வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் இலங்கை அளித்த கஜா (வடமொழியில் யானை) புயலுக்கு அடுத்து தாய்லாந்து அளித்த பேத்தை என்ற பெயர் சூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.