ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து. தலை தெறிக்க ஓடிய பயணிகள்.

சென்னையில் இருந்து திருப்பதி செல்லக்கூடிய சப்தகிரி எக்ஸ்பிரஸ் திடீர் என்று இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு தீ பிடித்ததால் ரயில் பட்டாபிராம் மற்றும் நெமிலிச்சேரி இடையில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நின்றது. இதன்காரணமாக ரயிலில் பயணம் செய்த பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 6:25 மணி அளவில் சென்னையில் இருந்து திருப்பதி செல்லக்கூடிய (ரயில் எண்:- 21261) சப்தகிரி எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து புறப்பட்டது. வண்டி ஆவடியைத் தாண்டி சென்றுகொண்டிருக்கும்போது திடீர் என்று இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு தீ பிடித்தாதால் இன்ஜின் பெட்டியில் அதிக அளவில் புகை வரத் தொடங்கி உள்ளது.

இதனால் ரயில் பட்டாபிராம் மற்றும் நெமிலிச்சேரி இடையில் நிறுத்தப்பட்டது. வழக்கமாக இந்த எக்ஸ்பிரஸ் காலை 6:25 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு 10:00 மணிக்கு திருப்பதியை சென்றடையும் ஆனால், இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு இரண்டு ரயில் நிலையத்துக்கு நடுவில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக நின்றுகொண்டிருப்பதால் ரயிலில் ஏசி கம்பார்ட்மென்ட்டில் 175 நபர்களும், 688 ரிசர்வ்டு நபர்கள் மற்றும் ஜென்ரலில் 400 பேர் என 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கள் செல்லவேண்டிய இடத்துக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதனால் வெளியூரிலிருந்து சென்னை வரும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் ஒரு சில ரயில்கள் புறநகர் ரயில்கள் செல்லும் பாதையில் இயக்கப்பட்டது. அரக்கோணம் திருத்தணி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் பாஸ்ட் பேசஞ்சர், பீச்பாஸ்ட் மற்றும் திருவள்ளூரிலிருந்து இயக்கப்படும் இருபதுக்கும் மேற்பட்ட ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சப்தகிரி ரயில் கோளாறு தொடர்பாக எந்தச் செய்தியையும் ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்குத் தெரிக்கவில்லை. ரயில் கால தாமதம் தொடர்பாகவோ ரயில் ரத்து தொடர்பாக எந்தத் தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ஆவடியிலிருந்து மட்டும் சென்னைக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னை சென்ட்ரல், கடற்கரை, வேளச்சேரி வழியாக செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.