கூடியிருந்து குடு அடிப்பார்கள்!! யாழ் சிறைச்சலைக்குள் நடக்கும் திருவிளையாடல்கள்.

கிளிநொச்சியில் இளைஞர் ஒருவரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 19 வயதான சந்தேகநபர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். நீதிமன்றில் முற்படுத்துவதற்காக சந்தேகநபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நடக்கும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகநபர் வாக்குமூத்தில் விவரித்துள்ளார்.

“என்னை மறியலில் வைப்பதற்கு தயாராகி உள்ளீர்கள். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் என்னை மறியலில் வைத்தால், நான் அங்கு போதைப்பொருளுக்கு அடிமையாவேன். குடு, கஞ்சா என எல்லாமுமே அங்கு தாராளமாகக் கிடைக்கும். போதைப் பொருள்களைப் பாவிக்கும் பெரும் கூட்டமே அங்கு உள்ளது. கூடி இருந்து குடு அடிப்பார்கள்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் நடக்கும் இந்தச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொலிஸாரால் ஏன் முடியவில்லை? பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சிறைக்குள் மறியலுக்கு அனுப்பி அங்கு இடம்பெறும் போதைப்பொருள் பாவையை தடுக்க பொலிஸாரால் முடியாதா?

சிவில் உடையில் பொலிஸாரை அங்கு அனுப்பிவைத்தால் குடு உள்ளிட்ட போதைப்பொருள்களை சிறைச்சாலைக்குள் கொண்டு வருபவர்களையும் அவற்றை அனுமதிக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களையும் பிடிக்க முடியும்” என்று சந்தேகநபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

“நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். எங்கள் இருவருக்கும் வயது குறைவு. எனினும் எமது காதலைப் பிரித்துவிடுவார்கள் என்று அச்சமடைந்து அவளை அழைத்துச் சென்று வாழ்ந்தேன். தற்போது எமக்கு குழந்தை உள்ளது. அதனால் எனது அச்சம் நீங்கிவிட்டது” என்றும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கினார்.

சந்தேகநபர் கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்படுத்தப்பட்டார். பொலிஸாரால் வழங்கப்பட்ட முதல் அறிக்கையை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேகநபர் இதற்கு முன்னரும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.