இலங்கைக்கு வழங்கும் நிதியை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளது.

இலங்கையில் அரசியல் நெருக்கடி நீடித்துள்ளதால், இலங்கைக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் மேற்கொண்டு வரும் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியான நிலைமை முடிவடைந்து விட்டது என்பது தெளிவாகும் வரை திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் அதிகரித்து வரும் நிலைமைகளை கண்காணித்து வருவதாக இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.

சர்வதேச நாணய நிதியம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை வழங்குவதற்காக அனுமதியை வழங்கியதுடன், அதில் தவணை கொடுப்பனவை வழங்க ஏற்பாடுகளை செய்திருந்தது.

முக்கியமான பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும் என நிபந்தனைகளின் அடிப்படையில், இந்த நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியிருந்தது.

எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் வரி சீர்த்திருத்தங்கள் அந்த நிபந்தனைகளில் அடங்கியிருந்தன. இதற்கு அமைய எரிபொருள் விலை சூத்திரத்தை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்தியிருந்தார்.