அன்பு மனைவிக்காக தாஜ்மஹால் கட்டியவருக்கு நேர்ந்த துயரம்

முகலாய பேரரசர் ஷாஜகான் தமது காதல் மனைவி மும்தாஜுக்கு எழுப்பிய காதல் நினைவுச்சின்னமான தாஜ்மஹாலுக்கு நிகராக இல்லை என்றாலும், தமது அன்பு மனைவிக்கும் அதுபோன்றதொரு நினைவுச்சின்னத்தை எழுப்ப ஃபைசல் ஹசன் ஆசித்திருந்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாம் மனைவியுடன் வாழ்ந்த கிராமத்தில் ஹசன் இந்த குட்டி தாஜ்மஹாலை எழுப்பியுள்ளார். ஆனால் அப்பகுதியில் உள்ள காதலர்களுக்கு இந்த குட்டி தாஜ்மஹால், ஷாஜகானின் தாஜ்மஹாலை விடவும் பெரிது என கூறுகின்றனர்.

மனைவியிடம் தீராத காதலுடன் வாழ்ந்து வந்த ஹசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது மிதிவண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது சாலைவிபத்தில் மரணமடைந்துள்ளார்.

தாம் மனைவியுடன் வாழ்ந்த அந்த கிராமத்தில் தமது குடியிருப்புக்கு அருகாமையில் ஹசன் அந்த குட்டி தாஜ்மஹாலை எழுப்பியிருந்தார்.

மட்டுமின்றி அப்பகுதி பெண்பிள்ளைகளுக்கு பாடசாலை ஒன்றை நிறுவ தனது சொந்த நிலத்தையும் ஹசன் இலவசமாக வழங்கியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தொண்டையில் உருவான புற்றுநோய் காரணம் ஹசனின் மனைவி தாஜாமுல்லி பீகம் மரணமடைந்துள்ளார்.

1953 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. அன்பு மனைவியின் மறைவுக்கு பின்னரே ஹசன் குட்டி தாஜ்மஹால் ஒன்றை கட்டுவதற்கு ஆயத்தமாகியுள்ளார்.

இதே இடத்தில் தான் மனைவியையும் அடக்கம் செய்துள்ளார் ஹசன். மரணத்திற்கு பின்னர் தம்மையும் அதே பகுதியில் அடக்கம் செய்ய வேண்டும் எனவும் கிராம மக்களிடம் கோரியிருந்தார்.