துஸ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவியின் கடைசி நிமிட வார்த்தைகள்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்துள்ள சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை – மலர் தம்பதியினருக்கு சவுமியா என்ற மகள் உள்ளார்.

பாப்பிரெட்டிபட்டியில் உள்ள விடுதியில் தங்கி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் சவுமியா, கடந்த 2ம் தேதியன்று தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். பகல் நேரத்தில் பெற்றோர் ஆடு மேய்ப்பதற்காக வெளியில் சென்றுள்ளனர்.

சவுமியா இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே மறைவான பகுதிக்கு சென்றுள்ளார். அதனை கவனித்த அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்ற இரண்டு பேர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சவுமியாவை தூக்கி சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

இதில் மயக்கமடைந்த மாணவியை ஆற்றொடை பகுதியிலேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சவுமியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால் பொலிஸார் அதனை தட்டிக்கழிக்கவே, மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பிறகே போலீஸர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் மாணவியின் உடல்நிலையும் மோசமடைந்தது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன், “அந்த 2 குற்றவாளிகளுக்கும் கடும் தண்டனை வாங்கிக் கொடுங்கள்” எனக்கூறிவிட்டு இருந்துள்ளதாக அவருடைய பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தற்போது மாவட்ட முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குற்றவாளிகளை விரைந்து பிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.