ஊருக்குள் வந்துவிடாதே... கொன்று விடுவேன்: மகளுக்கு தந்தையின் கொலைமிரட்டல்.

இந்திய மாநிலம் கேரளாவில் வேறு மத இளைஞரை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு தந்தை கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்களை கொல்ல வாடகை கொலைகாரர்களை தந்தை ஏற்பாடு செய்திருக்கலாம் என்ற அச்சத்தையும் பாதிக்கப்பட்ட இளம்பெண் நஸ்லா புகாராக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

தங்களை வாழ அனுமதிக்க வேண்டும் என நஸ்லா மற்றும் அவரது கணவர் விவேக் ஆகியோர் பல முறை கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நஸ்லாவின் தந்தை மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமது மகளையும் அவரது கணவர் விவேக்கையும் கொன்றுவிடுவதை தவிர தமக்கு வேறு வழியில்லை எனவும் இது தமது மானப்பிரச்னை எனவும் நஸ்லாவின் தந்தை அப்துல் லத்திஃப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தந்தையின் கொலை மிரட்டலானது அவரது விருப்பமாக இருக்க முடியாது எனவும், சிலரது நிர்பந்தம் காரணமாகவே இந்த கொலை மிரட்டல் என நஸ்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி நஸ்லாவும் விவேக்கும் மதம் மாறாமல் பதிவுத்திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து இந்த மாதம் 14 ஆம் திகதி நஸ்லாவின் தாயார் அனுப்பிய உறவினர்களால் அவர் கடத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள மன நல காப்பகத்தில் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டார்.

மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறியே நஸ்லாவை அந்த காப்பகத்தில் சிகிச்சைக்காக செர்த்துள்ளனர்.

ஆனால் கணவர் விவேக் அளித்த ஆட்க்கொணர்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் நஸ்லாவை உடனடியாக ஆஜர்படுத்த பொலிசாருக்கு உத்தரவிட்டது. திருமணம் முடிந்து 4 மாதங்கள் கடந்த நிலையிலும், இந்த திருமணத்தை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என நஸ்லாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.