கர்ப்பிணி என்றும் பாராமல் இளைஞன் செய்த வெறிச்செயல்.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பீகார் செல்லும் ஜாலியன்வாலா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் பயணித்துக் கொண்டிருந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது பயணி ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்தார். சக பயணிகள் யாரும் தட்டிக்கேட்கவில்லை. ஆனால் அந்த பெட்டியில் பயணம் செய்த கர்ப்பிணி அந்த பயணியை புகை பிடிப்பதை நிறுத்துமாறு கூறினார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த பயணி, கர்ப்பிணி என்றும் பாராமல் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் மயக்கம் அடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து ஷாஜகான்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. சக பயணிகள் அளித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் அந்த ஆசாமி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகாரில் சாத் பூஜை கொண்டாடுவதற்காக சென்றபோது நிகழ்ந்த இந்த சம்பவம் அந்த பெண்ணின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.