காதல் திருமணம் செய்த ஜோடிகள் கொடூரமாக ஆணவக்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் பெண்ணின் தந்தை உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள சூடுகொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நந்திஷ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுவாதி என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே உள்ள மலஹள்ளிப் பகுதி காவிரி ஆற்றில் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இரு உடல்களையும் மீட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், காதல் திருமணம் செய்து கொண்டதால், நந்திஷ், சுவாதி இருவரும் ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து காதல் திருமணம் செய்து கொண்டவர்களை ஆணவக் கொலை செய்ததாக, பெண்ணின் தந்தை உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.