கள்ளக்காதலனை கொன்று கறிவிருந்து சமைத்த பெண்..!

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும், மொராக்கோ நாட்டில் இருந்து இங்கு வேலைக்காக வந்திருந்த 20 வயது வாலிபருக்கும் சுமார் 7 ஆண்டுகால கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

ஒருகட்டத்தில் கள்ளக்காதலி மீது கொண்ட காதல் புளித்துக் கசந்துப் போன நிலையில், நான் மொராக்கோவுக்கு சென்று எனக்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள போகிறேன் என அவளிடம் அந்த வாலிபர் கூறியுள்ளார்.

இதனால், இவ்வளவு காலமாக அவர் செய்துவந்த பண உதவிகள் நின்றுப் போகும் என்று ஆத்திரமடைந்த அந்தப் பெண் தன்னை கைவிட்ட காதலனை வீட்டுக்கு வரவழைத்து தாக்கிக் கொன்றார். பின்னர், அவரது உடலை துண்டுத்துண்டாக வெட்டி, மிக்சியில் போட்டு, கொத்துக்கறியாக்கினார்.

அந்த கொத்துக்கறியை கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் பகுதியில் மிகவும் பிரசித்தியான ’மச்பூஸ்’ (நம்மூர் பிரியாணியைப் போல்) கொத்துக்கறிச்சோறு சமைத்தார். அந்த உணவை அருகாமையில் உள்ள இடத்தில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு சுடச்சுட கறிவிருந்தாக பறிமாறி மகிழ்ந்தார்.

இந்நிலையில், 3 மாதங்களாக காணாமல்போன அந்த வாலிபரை தேடி அவரது சகோதரர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சமீபத்தில் விசாரிக்க சென்றார். என்னை அவர் பிரிந்து சென்ற பிறகு இங்கு அவர் வந்ததே இல்லை என ஆவேசமாக பதிலளித்த அந்தப் பெண் அவரது முகத்தில் அடிப்பதுபோல் வீட்டுக் கதவை வேகமாக அறைந்து சாத்தினார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அந்த நபர், தனது சகோதரரை காணவில்லை என்றும் சம்பந்தப்பட்ட பெண்ணின்மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அல் ஐன் நகர போலீசில் புகார் அளித்தார்.

இதைதொடர்ந்து, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கிருந்த மிக்சியில் ஒரு மனிதப்பல் சிக்கி இருப்பதை கண்டனர். அந்தப் பல்லை கைப்பற்றி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் அளித்த நபரின் மரபணுவும், அந்த பல்லுக்குரியவரின் மரபணுவையும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட தடயவியல் பரிசோதனையில் அந்தப் பல்லுக்கு சொந்தக்காரரை அவரது முன்னாள் காதலி கொன்று, கறிவிருந்து படைத்த கதை வெட்டவெளிச்சமானது.

மிக்சியில் அரைபடாத சில பாகங்களை வெட்டி நாய்க்கு விருந்தாக்கிய விபரமும் தெரியவந்தது.

உடனடியாக அவரை கைது செய்த போலீசார், விசாரணை காவலில் அடைத்து வைத்துள்ளனர். அவருக்கு மனநல பரிசோதனையும் நடத்தப்பட்டதாக வளைகுடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.