நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பரிதாப மரணம்.

மன்னார் தோட்ட வெளி ஜோசப் வாஸ் நகர் கிராம பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் மூழ்கி அக்கிராமத்தைச் சேர்ந்த உறவு முறையைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் இன்று (10) சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ள சம்பவம் அக்கிராமத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் ரஜீத் (வயது-7) மற்றும் இந்தயூட் லிவிசன் (வயது-7) எனனும் சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு சிறுவர்களும் இன்று மாலை தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சிறுவர்கள் உயிரிழந்து சிறிது நேரத்தில் அப்பகுதிக்கு குளிக்கச் சென்ற மேலும் சில சிறுவர்கள் உறவினர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற தோட்டவெளி கிராம மக்கள் குறித்த இரு சிறுவர்களின் சடலங்களை மீட்டதோடு மன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசேட தடவியல் நிபுணத்துவ காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் வவுனியாவில் இருந்து வருகை தந்த விசேட தடவியல் நிபுணத்துவ காவல்துறையினர் விசாரனைகளை மேற்கொண்ட தோடு மீட்கப்பட்ட குறித்த இரு சிறுவர்களின் சடலங்களையும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குறித்த இரு சிறுவர்களின் சடலங்களும் கண்டு பிடிக்கப்பட்டு பல மணி நேரங்களின் பின்னரே காவல்துறையினர் வருகை தந்து சடலத்தை மீட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.