கணவனை எதிர்த்துப் பேசிய மனைவியின் நாக்கு அறுப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவரது தந்தை போலீஸ்காரராக உள்ளார். ஆகாசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்காக ஆகாஷ் ஒரு பெருந்தொகையை செலவிட்டதாவும், அந்த செலவு தொகையை வரதட்சணையாக கேட்டு தனது மனைவியைக் கொடுமைப்படுத்தியுள்ளார். வரதட்சணை கேட்டு பலமுறை கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி வரதட்சணை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றியபோது கணவர் ஆகாஷை எதிர்த்து மனைவி பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், மனைவியின் நாக்கை அறுத்துள்ளார். பின்னர், அவரது மனைவி உள்ளூர் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து தனது கொடூர செயல் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக மனைவியை பத்து நாட்களாக தனியறையில் அடைத்து வைத்துள்ளார்.

ஒருவழியாக கணவரின் கொடுமையில் இருந்து தப்பித்து பெற்றோரிடம் சென்ற அந்தப் பெண், நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் எடுத்துக்கூறி, அவர்கள் உதவியுடன் ஆகாஷ் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் மனைவி அளித்த புகார்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று புகார் அளித்ததை அடுத்து விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இதையடுத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.