Trending News...

மழையுடன் கூடிய நிலை மேலும் தொடரும்

இலங்கையைச் சூழ காணப்படும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் மேகமூட்டமான நிலையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் வட அரைப்பகுதியில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது

வடக்கு, கிழக்கு,வடமத்திய, வடமேல், மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களம்