40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கனேடிய இளைஞன்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.எஸ் ஆதரவுடன் பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டதாக ஒப்புக்கொண்ட கனேடிய இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்க வழக்கறிஞர்கள் குறித்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை கோரி வாதிட்ட நிலையில் தற்போது இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

20 வயதேயான கனேடிய இளைஞர் Abdulrahman El Bahnasawy நியூயார்க் சுரங்க ரயில் மற்றும் Times Square பகுதிகளில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தண்டனை காலத்தில் அவருக்கு உளவியல் சிகிச்சையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்கான திட்டமானது 4 நாடுகளில் வைத்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் வைத்து கடந்த 2016 மே மாதம் El Bahnasawy கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நியூயார்க் சுரங்க ரயில் மற்றும் Times Square பகுதிகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

குவைத் நாட்டில் பிறந்த இவர் தனது 14 ஆம் வயதில் பெற்றோருடன் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இவரது பெற்றோர்கள் போதைமருந்து தொடர்பான சிகிச்சைக்காக குவைத், கனடா மற்றும் எகிப்து நாடுகளில் இவரை அனுப்பியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எகிப்தில் இருந்து 2015 ஆம் ஆண்டு கனடா திரும்பிய இவர் அதன் பின்னர் ஐ.எஸ் ஆதரவு நபர்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.