யாழில் 7 வாள்களுடன் சிக்கிய ஆவா குழுவினர்.

பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த ஆவா குழுச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவி்த்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 3 அடி நீளமுள்ள 7 வாள்களும் மீட்கப்பட்டன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அண்மையில் வடமராட்சி இமயாணன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்கப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபர் மூவருக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனைவிட அவர்களுக்கு எதிரான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த சில தினங்களால் 20 இற்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரும் 24 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் மூவரும் கொக்குவிலைச் சேர்ந்தவர். சந்தேகநபர்களிடம் 7 வாள்கள் மீட்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் 3 அடி நீளம் கொண்ட மிகவும் கூரிய வாள்கள்.

விசாரணைகளில் பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் நாளை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆவா குழுவின் தலைவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்படும் மோகன் அசோக் கடந்த செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.