கடலில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு.

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாபல் பீச் பகுதியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர், உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (30) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றள்ளது.

கலகெதர, மடவத்த, தெல்கஸ்யாய பகுதியைச் சேர்ந்த எச். சந்தரு பண்டார (13 வயது) மற்றும் கலகெதர, மடவத்த, பகலவத்த பகுதியைச் சேர்ந்த நித்ஸர நிம்ஸான் ராஜபக்ஸ (17 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சீனக்குடா விமானப் படை முகாமில், விமானப் படை வீரர்களின் கலை நிகழ்வொன்று நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வுக்கு அவ்விருவரும் குடும்பத்தினருடன் வந்துள்ளனர். அதன்பின்னர், சீனக்குடா மாபல் பீச் கடற்கரைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதன்போதே, நீரில் இழுத்துச் செல்லப்பட்டு, இவ்விருவரும் மரணமடைந்துள்ளனர்.

அவ்விருவரின் சடலங்களும் கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த சீனக்குடா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தனர்.