பெண்களை ஏமாற்றும் தபால் உத்தியோகத்தர்!! அவதானமான இருக்க அறிவுறுத்தல்!!

வன்னியில் பெண்களை ஏமாற்றும் தபால் உத்தியோகத்தர்!! அவதானமான இருக்க அறிவுறுத்தல்!!

கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்குவைத்து வாழ்வாதாரத்திற்கு மாடுகள் வழங்குவதாக ஏமாற்றி பணம் அறவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேர், கிளிநொச்சியில் பால்கொள்வனவு செய்யும் இடங்களிற்கு சென்று பெண் தலைமைத்துவ குடும்பங்களின் விபரங்களை திரட்டியுள்ளனர்.

அவர்களிடமிருந்து குடும்ப பங்கீட்டு அட்டை, தேசிய அடடையாள அட்டை வங்கிக்கணக்கு இலக்கம், கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதம், போன்ற ஆவணங்களைத்திரட்டி அவர்களுக்கு நல்லிணக்க பசு மாடு வழங்குவதாக தெரிவித்து அவர்களிடமிருந்து முற்பணங்களையும் பெற்றுச்சென்றுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஊரியான், உடுப்பாற்றுக்கண்டல் கிராமத்தில் வசிக்கும் பெண்தலைமைத்தவ குடும்பம் ஒன்றிடம் ஆவணங்களைப்பெற்று குறித்த பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நுவரெலியாவிலிருந்து மாடுகள் கொண்டு வரப்படுவதாகவும் அதற்கு முற்பணமாக 56 ஆயிரம் ரூபாவினை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறி வங்கிக்கணக்கு இலக்கத்தை அனுப்பியிருந்தனர்.

அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டமையால் குறித்த பெண் குறித்த வங்கிக்கணக்கு இலக்கத்திற்கு 56 ஆயிரம் பணத்தினை வைப்பிலிட்டுள்ளார்.

பணம் வைப்பிலிடப்பட்டதையடுத்து, குறித்த நபரின் தொலைபேசி செயலிழந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கபபட்ட பெண் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மோசடியில் ஈடுபட்ட பிரதான சூத்திரதாரி இலக்கம் 24, சிவபுரம் வவுனிக்குளம் பிரதேசத்தில் வசிக்கும் வவுனிக்குளம் தபால் நிலைய உத்தியோகத்தர் என கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு மாந்தை கிழக்கு மற்றும் கிளிநொச்சி வட்டக்கச்சி, வன்னேரிக்குளம் பகுதியிலும் இவ்வாறு பெண்தலைமைத்துவ குடும்பங்களிற்கு மாடுகள் வழங்குவதாக ஏமாற்றி பல இலட்சம் ரூபா பணம்மோசடி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களால் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.