கனடாவில் இந்த சட்டத்தை மீறுபவர்களிற்கு கடும் நடவடிக்கை.

கனடாவில் மது போதையுடன் வாகனத்தை செலுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் மிகக் கடுமையான விதிமுறை இன்றிலிருந்து அமுலுக்கு வருகின்றன.

குறித்த இந்த சட்டமூலம் கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அதில் மது போதையுடன் வாகனத்தைச் செலுத்திச் செல்லும் சாரதிகளை கண்டறிவதற்கான சுவாச பரிசோதனையை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த சட்டமானது நடைமுறை படுத்தப்படத்தை அடுத்து, குடித்துவிட்டு மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திச் செல்பவர்களை கண்டுபிடித்து பொலிஸாரால் கட்டுப்படுத்தப்படும்.

இதன் மூலம், வீதி விபத்துகளையும் அதனால் ஏற்படும் இறப்புகளையும் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் அவ்வாறு மது போதையுடன் வாகனத்தைச் செலுத்திச் செல்வது கண்டறியப்பட்டால், அவர்களுக்கான அபராதமும் அதிகரிக்கப்படுகிறது.

அதிகாரிகளுக்கு வாகன சாரதி ஒருவரை நிறுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் இருந்தால் மட்டுமே அவரை நிறுத்தி பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தினை இது மாற்றியுள்ளது.

இந்த புதிய சட்டத்தில் எந்தவொரு சாரதியை வேண்டுமானாலும் அதிகாரிகள் நிறுத்தி அவரிடம் சுவாச பரிசோதனை செய்துகொள்வதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த இந்த விதிமுறைகள் கடுமையான சட்டச் சிக்கல்களுக்கு முகங்கொடுக்கக்கூடும் என்று சில தரப்புகளால் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சட்ட நடைமுறை ஏற்கனவே 40-க்கும் அதிகமான நாடுகளில் அமுலில் உள்ள போதிலும, காரணம் இன்றி ஒருவரை தடுத்துவைத்து சோதனை செய்வதற்கு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரம், தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கருத்து வெளியிடப்படுகிறது.