ஐ.தே.க வினை பணயக்கைதியாக வைத்திருக்கும் கூட்டமைப்பு. மஹிந்த கருத்து.

அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரப்படி ஐக்கிய தேசிய கட்சியை ஆட்டிப்படைக்கும் சக்தியாக கூட்டமைப்பு மாறியுள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 103 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சி 14 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பணயக் கைதியாகப் பிடித்து வைத்திருக்கிறது என்று கடும் கோபமாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என, 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில், 14 வாக்குகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையவை.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது.

ஆனாலும் அன்றைய நாள், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று வாக்களித்தாலும், தாங்கள் அரசாங்கத்தில் சேரப் போவதில்லை எனவும், எதிர்க்கட்சியிலேயே இருப்போம் என்றும் கூறியிருந்தார்.

எனவே, இங்கு உண்மையில் என்ன நடந்தது என்றால், 103 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை கூட்டமைப்பு பணயக் கைதியாக வைத்துள்ளது.

கூட்டமைப்பின் கருத்துக்களுக்கு இணங்கவில்லை என்றால், ஐக்கிய தேசியக் கட்சி எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கக் கூடும்.

நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி தமிழ் தேசிய கூட்டமைப்பிடமே இருப்பதாக மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.