உயிர்க்கொல்லி போதைப்பொருள் யாழில் கைப்பற்றப்பட்டது.

பண்டத்தரிப்புப் பகுதியில் பிறோன் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

இந்த உயிர்க்கொல்லி போதைப்பொருள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் சுட்டிக்காட்டினர். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. “வட்டுக்கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பண்டத்தரிப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

அதனையடுத்து அவரிடமிருந்து பிறவுன் ஐஸ் எனப்படும் அதி சக்தி வாய்ந்த போதைப்பொருள் 85 கிராம் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இந்த வகைப் போதைப்பொருள் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான போதைப் பொருட்கள் உங்கள் வாழ்க்கையை சீரழித்து மிகவும் கேவலமான நிலைக்கு கொண்டு செல்லும்.