பெண்ணை காப்பாற்ற போய் நதியில் காணாமல் போன நபர். |பிரான்ஸ்

ஒரு பெண்ணைக் காப்பாற்றப் போய், அவரே காணாமற்போன ஒரு துயரச் சம்பவம், Quimper (Finistère) இல் நடந்துள்ளது.

இங்கு இருக்கும் Odet நதியில், 49 வயதுப் பெண் ஒருவர்,  தற்கொலை செய்வதற்காகக் குதித்துள்ளார். இதனைக் கண்ட 40 களின் வயதுகளில் உள்ள இந்த நபர், ஒருகணமும் சிந்;திக்காமல் நதியினுள் குதித்து இந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.

இந்த நடவடிக்கையில் இவரோடு இணைந்து, இரவுக் காவற்படையின் ஒரு காவற்துறை வீரரும் குதித்துள்ளர். தற்கொலை செய்யமுயன்ற பெண் மீட்கப்பட்டுள்ளார். காவற்துறை வீரரும் பாதுகாப்பாக நதியிலிருந்து வெளியேறி உள்ளார்.

ஆனால் பெண்ணைக் காப்பாற்றக் குதித்த, வீரமுள்ள அந்த நபர் மட்டும் கரையேறி இருக்கவில்லை. உடனடியானத் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. தீயணைப்புப் படையினரின் சுழியோடிகள் மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் தேடுதல் நடவடிக்கை தொடர்கின்றன.

தண்ணீரின் அதியுச்சக் குளிரினால் பாதிக்கப்பட்ட, தற்கொலைக்கு முயன்ற பெண், வைத்தியசிகிச்சை பெற்று வருகின்றார்.

காப்பாற்றக் குதித்த அந்த நல்ல உள்ளம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது துயரம்.