காதலை கைவிடாத மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை…

விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜாக்கனி. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ஜென்சி மேரி (வயது 37). இந்த தம்பதிக்கு 4 மகள்கள்.

இவர்களது மூத்த மகள் அபிநயா (17). மல்லாங்கிணறில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜாக்கனி மதுரையில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று இருந்தார். மாலையில் அவரது மற்றொரு மகள் கவுசல்யா, பள்ளிக்கூடம் சென்றுவிட்டு திரும்பியபோது வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கவுசல்யா, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரின் செல்போனில் இருந்து தந்தை ராஜாக்கனிக்கு தகவல் தெரிவித்தார்.

சற்று நேரத்தில் ஊர்திரும்பிய ராஜாக்கனி வந்து பார்த்த போது, வீட்டின் உள்ளே அவருடைய மனைவி ஜென்சிமேரி தூக்கில் பிணமாக தொங்கினார். மகள் அபிநயா அதன் அருகே இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தாய், மகளின் உடல்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவம் குறித்து மர்மம் நிலவியதால், அதுபற்றி ராஜாக்கனி மற்றும் அவருடைய குடும்பத்தாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-2 மாணவியான அபிநயா, ஒரு வாலிபரை காதலித்துள்ளார். இந்த விஷயம் அபிநயாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால், மகளை கண்டித்துள்ளனர். ஆனால், அபிநயா காதலில் உறுதியாக இருந்துள்ளார். படிக்கின்ற வயதில் காதல் தேவையில்லை, எனவே அந்த வாலிபரை சந்திக்கக்கூடாது என புத்திமதி சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.

இந்த நிலையில் ராஜாக்கனி நேற்று முன்தினம் மதுரைக்கு சென்றுவிட, மற்ற 3 பெண் குழந்தைகளையும் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டனர். தாய் ஜென்சி மேரியும், மூத்த மகள் அபிநயாவும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஜென்சிமேரி மகளுக்கு அறிவுரை கூறினார். ஆனால், அதை அபிநயா கேட்காமல், காதலனை திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறியதால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மகள் மீது ஜென்சிமேரி கடும் ஆத்திரம் அடைந்தார்.

பின்னர் மாணவி அபிநயா கட்டிலில் படுத்துள்ளார். அப்போது, தனது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என விபரீத முடிவுக்கு வந்த ஜென்சிமேரி, ஒரு கயிற்றால் திடீரென மகளின் கழுத்தை இறுக்கியதாக தெரிகிறது. இதனால் மூச்சுத்திணறி அபிநயா இறந்ததை தொடர்ந்து, தூக்குப் போட்டு ஜென்சி மேரியும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

காதலை கைவிடாத மகளை தாயே கொன்றுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.