நாடு கடத்தப்பட இருந்த குடும்பத்திற்கு கனடா அரசின் பரிசு.

கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் நாடு கடத்தப்பட இருந்த ஒரு குடும்பத்திற்கு கனடா அரசாங்கம் எதிர்பாராத பெரிய பரிசு ஒன்றை அளித்துள்ளதால், அந்த குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போயுள்ளனர்.

The Montoyas என்று அழைக்கப்படும் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, உயிருக்கு அஞ்சி 2012ஆம் ஆண்டு கனடாவுக்கு ஓடி வந்தது.

கனடாவில் புகலிடம் கோரிய அவர்களின் கோரிக்கை விசாரிக்கப்படுவதற்கே ஐந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், அது நிராகரிக்கவும் பட்டது.

2012இல் கொலம்பியாவில் இருந்த சூழல் தற்போது மாறிவிட்டதாகத் தெரிவித்த நீதிமன்றம், அவர்களது கோரிக்கையை நிராகரித்தது.

ஆனால் அந்த குடும்பத்தினரோ அவர்கள் கனடாவையே தங்கள் நாடாக கருதி வாழத் தொடங்கி விட்டதாகவும், தொழில்கள் தொடங்கியிருப்பதாகவும், சொத்துக்கள் வாங்கியிருப்பதாகவும் வாதிட்டனர்.

கனடா வந்த பின் அந்த குடும்பத்தில் ஒருவரான Luisa, 2017ஆம் ஆண்டு கனேடியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்.

அவரது சகோதரரான Camiloவுக்கும் அவரது மனைவி Bettsyக்கும் ஒரு குழந்தையும் பிறந்தது.

தற்போது மூன்று வயதாகும் தாமஸ் என்ற அந்த குழந்தை ஒரு கனேடிய குடிமகன். Montoyas குடும்பம் அளித்துள்ள மனிதநேய மற்றும் கனேடியரை திருமணம் செய்ததன் அடிப்படையிலான விண்ணப்பங்கள் புலம்பெயர்தல் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இம்மாதம் 24ஆம் திகதி கனடாவிலிருந்து கொலம்பியாவுக்கு நாடு கடத்தப்பட இருந்த Montoyas குடும்பம், புலம்பெயர்தல் துறை அமைச்சரான Ahmed Hussen தலையீட்டின் பேரில், இன்னும் பதினெட்டு மாதங்கள் தற்காலிக வாழிட மற்றும் வேலை உரிமங்களுடன் கனடாவில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தங்களுக்கு மிகப்பெரிய கிறிஸ்துமஸ் பரிசு என்று தெரிவித்துள்ள Montoyas குடும்பம், அத்துடன் தங்கள் மனிதநேய, மற்றும் கனேடியரை திருமணம் செய்ததன் அடிப்படையிலான விண்ணப்பங்களைத் தொடர்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

இது குறித்து Luisa கூறும்போது, நாங்கள் கனடாவுக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம், நாங்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு வேலை செய்து கனடா எங்களுக்கு அளித்ததை கனடாவுக்கே திருப்பிக் கொடுப்போம், இது உண்மையாகவே எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.