யாழில் பொறிவைத்து பிடிக்கப்பட்ட திருடன்.

இரவுநேரம் வீட்டினுள் நுழைந்து திருடுவதற்கு முயன்ற திருடர்களிற்கு வீட்டு உரிமையாளர் வைத்த பொறியில் ஒருவர் மாட்டிக் கொண்டுள்ளார். மற்றைய மூவரும் தப்பிச் சென்றுவிட்டனர். மாட்டிய திருடன் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

இந்த சம்பவம் விடத்தற்பளை பாடசாலைக்கு அருகில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.

வீட்டு வளவிற்குள்- இருளுக்குள்- நால்வர் மறைந்து நிற்பதை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். உடனே சுதாகரித்த அவர், அவர்களை கண்டதை போல காட்டிக்கொள்ளாமல், சாதாரணமாகவே வீட்டிற்குள் வந்து, அயலர்களிற்கு தொலைபேசியில் தகவலை சொல்லி, வீட்டு வளவை சுற்றிவளைத்து நிற்க செய்தார். திடீரென மின்விளக்கை ஒளிரச் செய்து, குரல் வைத்தால் வீட்டுக்குள் நுழையும்படி அவர்களிற்கு சொல்லப்பட்டிருந்தது.

பின்னர், இரவு 10.30 மணியளவில் வீட்டு மின்விளக்குகளை அணைத்தார். வீட்டுக்குள்ளிருந்தபடி சத்தமின்றி, என்ன நடக்கிறதென்பதை அவதானித்துக் கொண்டிருந்தார்.

வீட்டிற்குள் எந்த சத்தமும் இல்லையென்றதும், அனைவரும் உறங்கி விட்டனர் என நினைத்த திருடர்கள், இரவு 11 மணியளவில் வீட்டு யன்னலை பிரிக்க முயன்றனர். வீட்டுக்காரர் உடனடியாக மின்விளக்குகளை ஒளிர விட்டு, சத்தமிட்டார். இதை எதிர்பாராத திருடர்கள் நால்வரும், தலைதெறிக்க தப்பியோடினர். வீட்டு வளவின் வெளியில் நின்றவர்கள், அவர்களை விரட்டிச் சென்றனர். நால்வரில், ஒருவன் மட்டும் அகப்பட்டான். மற்றைய திருடர்கள் தப்பியோடி விட்டனர்.

அவனை மரத்தில் கட்டி வைத்து நையப்புடைத்தனர். பின்னர் பொலிசாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான்.

பொலிசாரின் விசாரணையில் தப்பியோடி திருடர்களை பற்றிய விபரம் தெரிய வந்தது. தப்பியோடிய திருடர்களில் ஒருவன் கெற்பலியை சேர்ந்தவன். தற்போது உடுப்பிட்டியில் வசிக்கிறான். மற்றைய இருவரும் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள்.

வடமராட்சியின் உடுப்பிட்டி பகுதியில் கடந்த ஒரு வருடமாகவே பல திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. குடாநாட்டையே அதிர வைத்த பெரிய திருட்டுக்கள் அவை. அந்த திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. அந்த சம்பவங்களிலும் இந்த திருடர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.