உயிரோடு விளையாடும் வைத்தியசாலை ஊழியர்கள்.

முல்லைத்தீவு மாஞ்சோலையில் உள்ள மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லும் அவசர நோயாளர்களைக்கூட மறுநாள் வருமாறு திருப்பி அனுப்புவமாக தொடர்ந்தும் குற்றம் சாட்டப்படுகின்றது.
முல்லைத்தீவில் நாய் ஒன்றினால் முகத்தில் கடியுண்ட 8 வயதுச் சிறுமியை சிகிச்சைக்கு உட்படுத்தாது மறுநாள் வருமாறு கூறி மாவட்ட வைத்தியசாலையில் திருப்பியனுப்பியதால் பெற்றோர் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தனியார் வைத்தியரோ மாவட்ட வைத்தியசாலைக்கே செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு கடந்த 18ம் திகதி மாலை 5.30 மணியளவில் 8 வயதுச் சிறுமியை ஓர் வளர்ப்பு நாய் கடித்தமையினால் சிறுமியின் தாயார் சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வைத்தியர் பணியில் இல்லை. இதனால் அங்கே இருந்த ஊழியர்கள் சிறுமியை மறுநாள் அழைத்து வருமாறுகூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால் வைத்தியசாலையில் இருந்து தனது மகளுடன் வெளியேறிய தாயார் சிறுமியை ஓர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது நிலமையினை அவதானித்த தனியார் வைத்தியர் முகத்தில் கடி காயம் உள்ளது. வளர்ப்பு நாய்க்கு தடுப்பூசி ஏற்றப்படவில்லை.
எனவே சிறுமிக்கு கண்டிப்பாக தடுப்பூசி போடவேண்டும் மாவட்ட வைத்தியசாலைக்கே மீண்டும் சென்று நிலமையை கூறுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் சிறுமியின் தாயார் செய்வதறியாது பதறிய நிலையில் மீண்டும் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்று நிலமையைகூறி விடுதியில் அனுமதிக்க கோரியுள்ளார்.
அதன் பெயரில் நீண்ட முயற்சியின் பின்னர் சிறுமி 18ம் திகதி விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் 20ம் திகதி மாலை வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று 20 வயது யுவதி ஒருவர் கடந்த 10ம் திகதி காலில் தகரம் வெட்டிய நிலையில் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் மதியம் 1மணியளவில் வைத்தியர் பணியில் இல்லாத காரணத்தினால் மறுநாள் வருமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இதனால் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய யுவதி வேறு மார்க்கம் இன்றி தனியார் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இருப்பினும் குறித்த புண் ஏற்புவலியாக்கிய நிலையில் கால் பெரும் வீக்கத்துடன் கொதி வலி காரணமாக யுவதி தற்போது 3 தினங்களாக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ஓர் மாவட்ட வைத்தியசாலையிலேயே வைத்தியர்கள் இன்மை காரணமாக ஏற்படும் பெரும் பாதிப்புக்கள் தொடர்பில் எவருமே கண்டுகொள்வமில்லை. என முல்லைத்தீவு மக்கள் சார்பில் எழுப்பும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பூங்கோதையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது , குறித்த இரு சம்பவங்களும் இடம்பெற்றதாக இதுவரை முறையிடப்படவில்லை.
அவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் உரிய முறையிலான விசாரணைகள் இடம்பெறும் . என்றார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மேற்படி குற்றச் சாட்டானது நீண்டகாலமாக பலராலும் முன்வைக்கப்படுகின்றபோதும் குற்றச் சாட்டுக்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரன் நேற்றைய தினம் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு திடீர் பயணம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.