வயோதிபரை பந்தாடிய போலீஸ் வாகனம். ஆபத்தான நிலையில் வயோதிபர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

இடது கை, வலது கால்களில் பாரிய எலும்பு முறிவுகளுடன் தலைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் மூளையின் ஒருபகுதி சிதைவடைந்து போயுள்ளதாகவும் உடனடியாக சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் வாகனம் ஒன்று வீதியை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே குறித்த விபத்தின்போது படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் வாகனமே குறித்த விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத்தை ஓடிய பொலிஸ் சாரதி கிளிநொச்சிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.