யாழில் இடம்பெற்ற விபத்து. காலை இழந்த பரிதாபம்.

முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த குடும்பத்தலைவர் படுகாயமடைந்தார்.

அவரின் வலது கால் சிதைவுண்டதால் முழங்காலுக்கு கீழ் பகுதி முற்றாக அகற்றப்பட்டது.

மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தெல்லிப்பளையைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான 2 பிள்ளைகளின் தந்தை குணபாலசிங்கம் கமலசீலன் (வயது-32) என்பவரே படுகாயமடைந்தார்.அவரை அந்தப் பகுதியில் நின்றவர்கள் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்த்தனர்.

வலது கால் சிதைவடைந்தமையால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குடும்பத்தலைவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் மாலை அவரது வலது காலின் முழங்காலுக்கு கீழ் பகுதி சத்திரசிகிச்சை மூலம்  முற்றாக அகற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.