புத்தரின் முகத்தை சிதைத்த காவாலிகள் சிக்கினார்கள்.

மாவனல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பலவற்றிலும் புத்தர் சிலைகள் பலவற்றுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரையும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை மஜிஸ்ட்ரேட் நீதிபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்டவுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்றையும் குறித்த இடத்துக்கு அனுப்பி வைக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்த வேளையிலேயே பிடிபட்ட இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இன்னும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர்கள் அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, கண்டி மாவனெல்லை பகுதியில் புத்த சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிய வருகிறது.


தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி அங்கிருந்து அவசர தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, அமைச்சர் கபீர் ஹசீமிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவனெல்ல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்கமாறு அவர் கோரியுள்ளார்.


பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மாவனெல்ல பிரதேசத்தின் பல இடங்களில் உள்ள பௌத்த சிலையை உடைத்ததாக முஸ்லிம் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் மாவனெல்ல பிரதேசத்தில் சந்தியில் உள்ள பௌத்த சிலைக்கு சேதம் ஏற்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் அவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.


எம்.அஷ்பர் என்ற சந்தேக நபரை தாக்கிய பிரதேச மக்கள் பின்னர் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக குறித்த பிரதேசத்தில் இவ்வாறு புத்தர் சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்களுக்கும் குறித்த இளைஞர்களுக்கும் இடையில் தொடர்பிருக்கும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் பதற்ற நிலைமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. 

இதேவேளை சிலை உடைப்பு விவகாரம் மத கலவரத்தை ஏற்படுத்தும் அளவு செல்லும் என்பதனால் அமைதியாக இருக்குமாறும் தவறு செய்தவர்களுக்கு முழுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.