யாழ் சுன்னாகத்தில் நடந்த பயங்கரம்.

சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் ஜிம் நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை ஆவா குழுவினரே முன்னெடுத்தனர் என்று ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது

அந்த இடத்தில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையிலும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தருவதில் ஏற்பட்ட தாமதித்தமையும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையம் தற்போதைய தனியார் காணியை விடுவித்து சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் ஜக் மோட்டோர்ஸ் என்ற இடத்தில் பொலிஸ் நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அந்தக் காணியில் தற்போது ஜிம் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.

அந்த இடத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு தரப்பினர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் பொலிஸ் நிலையம் அமைக்கத் திட்டமிட்டிருந்த வளாகத்துக்குள் இன்று மாலை புகுந்த முகத்தில் துணி கட்டிய 10 பேர் கொண்ட கும்பல், அங்கு இயங்கி வந்த ஜிம் நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது. அத்துடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்துள்ளது.

அதனால் அங்கு தீப்பிடித்தது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படை வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவத்தை அடுத்து சுன்னாகம் பொலிஸாரும் தகவல் வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் தீயணைப்புப் படை வருகை தந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னரே வருகை தந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.