கணவன் மனைவி இரவிரவாக செய்து வந்த திடுக்கிடும் செயல்: பகீர் பின்னணி

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் கணவன் மனைவியாக சேர்ந்து பலரிடம் கொள்ளையடித்த இரண்டு ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொந்தபாக்கத்தைச் சேர்ந்த பெயிண்ட் வியாபாரி விஸ்வநாதன் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

கார் பாடி பாலத்திலிருந்து இருந்து இறங்கியபோது சாலை ஓரத்தில் இரண்டு பெண்கள் உதவி கேட்பது போல காரை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விஸ்வநாதன் அவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்த போது புதர் மறைவில் இருந்து ஓடிவந்த இரண்டு ஆண்கள் அவரை தாக்கியும், கார் கண்ணாடியை உடைத்தும் கத்திமுனையில் பணம், நகையைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வில்லிவாக்கம் பொலிசார் இரவு ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆரப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் ரேவதி தம்பதியையும் ராஜமங்கலத்தைச் சேர்ந்த சுகுமாரன் வரலட்சுமி தம்பதியையும் கைது செய்த பொலிசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தொடர்ந்து இதே பாணி கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.