பேருந்துக்குள் வைத்து தாயை வெட்டிக்கொன்ற மகன் :அலறியடித்து ஓடிய பயணிகள்!!

தாம்பரத்தில் பேருந்துக்குள் வைத்து தாயை வெட்டிக்கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுவாஞ்சேரி காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (77). இவருக்கு தேவராஜ் (53) என்கிற மகனும், விஜயலட்சுமி (55) என்கிற மகள் உட்பட 3 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முத்தம்மாள் தனக்கு சொந்தமான நிலத்தை மூன்று மகள்கள் மற்றும் மகனுக்கு சரிசமமாக பிரித்து கொடுத்துள்ளார்.

இதில் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக தன்னுடைய தாயை பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக தேவராஜ் காத்திருந்துள்ளார். இந்த நிலையில் முத்தம்மாள் தன்னுடைய மகள் விஜயலட்சுமியுடன் சேர்ந்து கோவூரில் வசிக்கும் இன்னொரு மகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

தாம்பரம் பேருந்து நிலையத்தில் 166 எண் கொண்ட பேருந்தில் இருவரும் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது அரிவாளுடன் பேருந்தில் ஏறிய தேவராஜ் சரமாரியாக தன்னுடைய தாயையும், சகோதரியையும் வெட்டிவிட்டு, இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பேருந்து முழுவதும் ரத்தம் கிடப்பதை பார்த்த பயணிகள் அலறியபடியே அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட விஜயலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.