மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் மரணம்.

வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த சிறுவன் கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த சம்பவம் ஒன்று கிராமத்தையே சோக மயமாக்கியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த சிறுவன் கிளிநொச்சியில் உள்ள உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டிற்கு சென்று விட்டு வவுனியா வருவதற்காக நேற்று மதியம் தனது மாமாவின் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது வேகக்கட்டுப்பாட்டை இழந்து குழாய் கிணறு பொருத்தும் இயந்திரத்துடன் பயணித்த கனரக வாகனத்தில் மோட்டார்சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்டூடியோ ராஜா என்பவரின் ஆறு வயது மகனான லிதுசன் என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்த சிறுவன் என்பதுடன் நேற்று முந்தினமே தனது ஆறாவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சிறுவனின் இழப்பால் தோணிக்கல் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.