மின்கம்பத்துடன் மோதிய மோட்டார்சைக்கிள். இளைஞன் பலி.

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லங்கா பட்டினம் பிரதான வீதி வாழைத்தோட்டம் பகுதியில் இன்றிரவு (17) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் வெருகல், மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த தங்கராசா விஜிகரன் ( 24 வயது) எனவும், படுகாயமடைந்தவர் மாவடிச்சேனை, சேனையூர் பகுதியைச் சேர்ந்த கனகராசா வசந்தகுமார் (24 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் லங்கா பட்டினம் வீதியினூடாக சென்று கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த தங்கராசா விஜிகரன் உடைய சடலத்தை மூதூர் தள வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும், பலத்த காயங்களுக்குள்ளான கனகராசா வசந்தகுமார் 24 வயதுடைய இளைஞரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து தொடர்பில் விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.