யாழில் வெறியில் தண்டவாளத்தில் படுத்தவரின் கையை துண்டாக்கிய ரயில்!!

யாழ்ப்பாணத்தில் இன்று பரவலாக இடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் மதுபோதையில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் உறங்கியவர், தொடருந்து மோதி கை ஒன்றை இழந்துள்ளார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதுண்டே குடும்பத்தலைவர் வலது கையை இழந்தார். அவரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ந்தனர்.

அரியாலையைச் சேர்ந்த எஸ்.லோகேஸ்வரன் (வயது -59) என்பவரே வலது கை முற்றாக துண்டான நிலையில் தலை பகுதியிலும் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். அவரது துண்டான கை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட போதும் அதனை இணைக்க முடியாது சத்திரச்சிகிச்சை செய்யப்பட்டது என்றும் வைத்தியசாலைத் தகவல் தெரிவித்தன.

இதேவேளை, யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுவன் உள்பட இளைஞர்கள் இருவர் படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மானிப்பாய் பகுதியை சேர்ந்த எஸ். சர்மிலன் (வயது-29) என்ற இளைஞன் ஒருவர் இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த தனது நண்பர் ஒருவருடன் தனது தங்கையின் 6 வயது சிறுவனையும் அழைத்துக் கொண்டு வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

மானிப்பாயில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையாக தான் ஓட்டுவதாக இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த நண்பர் கேட்டுள்ளார்.
அதன்படி, நடுவில் 6 வயது சிறுவனான கஞானனை வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளை வேகமாக பறந்த போது, வேகக்கட்டுப்பாட்டையிழந்து நிலை தடுமாறி கச்சேரிக்கு அருகில் உள்ள வளைவு மதில் ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி சுக்குநூறானது.

இதில் இந்தியாவிலிருந்து வந்தவர் மிகவும் ஆபத்தான நிலையிலும் சிறுவன் சிறுகாயங்களுடனும் பின்னால் இருந்தவர் கால் கை எலும்புகள் முற்றாக நொருங்கிய நிலையிலும் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.