வைரக்கற்களால் தகதகவென மின்னும் எமிரேட்ஸ் விமானம்

சமீபத்தில் வைரக்கற்கள் நிறைந்த விமானத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த புகைப்படம் பார்ப்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவென்றால்…லட்சக்கணக்கான வைரக்கற்கள் பதிந்து கண்ணை பறிக்கும் வகையில் மின்னிய விமானம் தான்.

‘ எமிரேட்ஸ் வழங்கும் பிளிங் 777 ‘ என்று பெயரிடப்பட்ட அந்த விமானத்தின் புகைப்படத்தை பார்த்த அனைவரும் இது உண்மையா ? என்று ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர். வைர கற்களுடன் மின்னும் அந்த விமானம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்த விமானம் உண்மையில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிரபல படிக கற்கள் கலைஞரான சாரா ஷகீல் தனது கற்பனையில் உருவாக்கிய புகைப்படமே அந்த வைரக்கற்களால் மின்னும் விமானம். இதனை அவர் தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

சாரா ஷகீல் வெளியிட்ட அந்த விமானத்தின் புகைப்படத்தை எமிரேட்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில் வெளியிட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட எமிரேட்ஸ் நிறுவனம், ‘ இது உண்மையில்லை. ஒரு கலைஞரின் புகைப்படம் மட்டுமே ‘ என கூறியுள்ளது.