பெண்களை அபகரித்து பாலியல் தொழிலில் தள்ளிய கிளி ஜோசியர்..?

திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில், கொலையாளியைப் பிடிக்க காவல்துறை தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த கொலையின் அதிர்ச்சி பின்னணி வெளியாகி இருக்கிறது.

திருப்பூரை அடுத்த மங்கலம் பாரதிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமார். திருப்பூர் பார்க் ரோடு மாநகராட்சி பூங்கா முன்பு அமர்ந்து கிளி ஜோதிடம் பார்த்து வந்தார்.

நேற்று மதியம் அந்தப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர் அரிவாளை கொண்டு ரமேஷை வெறியோடு சராமரியாக வெட்டி வீழ்த்தினார்.

அத்தோடு பைக்கின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை அங்கு கூடியிருந்தவர்களிடம் கொடுத்து விட்டு தப்பி சென்றுவிட்டார்.

அவர் வீசிய துண்டுபிரசுரத்தில், “திருப்பூர் குமரன் பார்க் ரோட்டில் கிளி ஜோதிடம் செய்வது என்ன? இவன் திருப்பூர் மங்கலம் பாரதி புதூரை சேர்ந்தவன். பெயர் ஜே.ரமேஷ் என்கிற குமார்.

இவன் கடந்த 14 வருடங்களுக்கு மேல் பூங்காவுக்கு வெளியில் அமர்ந்து பூங்காவுக்கு வரும் பெண்களையும், காதலர்களையும் கண்ணி வைத்து, தீயசக்தி சாத்தானை வைத்து, பிடித்து பாலியல் தொழில் நடத்தி வருகிறான்.

இவனுக்கு பின்னால் சில அரசியல்வாதிகள், சில முக்கிய பிரமுகர்கள், சில போலீஸ் அதிகாரிகள், சில நிறுவன முதலாளிகள் மற்றும் அதன் கும்பலை சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

எனக்கும் போயம்பாளையம் ராஜாநகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 9 வருடங்களாக பழக்கம் இருந்து வந்தது.

எங்கள் இருவருக்கும் பிறந்த ஒரு மகன் உள்ளான். கண்டுப்பிடிக்க நடவடிக்கை கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து அவளை என்னிடம் இருந்து பிரித்து கூட்டிச்சென்று விட்டான்.

கடந்த 2 வருடம் 7 மாதங்களாக ரமேஷின் பிடியில் அவள் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறாள். இதனால் அந்த பெண்ணை மீட்டு, கூட்டிச்சென்றவர்களுக்கு பின்னால் இருக்கும் நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவன் இந்த விஷயத்தில் முறையான விசாரணை செய்து கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல் தொழில் செய்ததை கண்டுபிடித்தது போல இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இப்படிக்கு: இவனால் பாதிக்கப்பட்டவன்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த துண்டுப்பிரசுரத்தை வைத்து கொலையாளியை காவல்துறை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

அவர் பெயர் ரகு. ஏற்கெனவே திருமணமான அவர் அந்தப் பகுதியில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த மற்றொரு பெண்ணுடன் நெருங்கி பழகி உள்ளார்.

அந்தப் பெண்ணிற்கும் ஏற்கெனவே திருமணம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக அந்தப்பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் தனது கணவருடன் சென்றிருக்கிறார்.

அந்தப் பிரிவை தாங்க முடியாத ரகு கிளிசோசியரிடம் சென்று சேர்த்து வைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டிருக்கிறார்.

இதற்காக பெரும் தொகையை சோசியர் ரமேஷும் பெற்றிருக்கிறார். ஆனால் சொன்னது போல் அந்த பெண்ணை சேர்த்து வைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ரகு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அந்த சோசியரை நண்பருடன் சென்று தாக்கியுள்ளார்.

இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது. இதனையடுத்து மனம் வெறுத்துப்போன ரகு சோசியர் ரமேஷை வெட்டி கொலை செய்திருக்கிறார்.

தற்போது தலைமறைவாக இருக்கும் ரகு காவல்துறையிடம் சிக்கினால் மட்டுமே, கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்’ என்கின்றனர் திருப்பூர் போலீஸார்.