விதைகளை நசுக்கி ஆண்மை இழக்கச் செய்த மோட்டார் சைக்கிள்!! அவதானம்.

அன்றும் வழமைபோல் எனது அலுவலக ஊழியருடன் தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளரை பார்வையிட்டு வந்தேன். அது ஆண்கள் சிகிச்சை பிரிவு.

வாட்ட சாட்டமான இளைஞன் ஒருவன் கட்டிலில் படுத்திருந்தார். முதலில் என்னை நான் அறிமுகப்படுத்தி நான் அவரின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை கேட்டேன்.

அடுத்து அவரிடம் என்ன காயம் இருக்கு என்று கேட்டேன், அதற்கு அவர் தனக்கு பெரிதாக காயம் ஒன்றும் இல்லை என்று கூறியதோடு தனக்கு சட்ட வைத்தியபரிசோதனை செய்ய விருப்பம் இல்லை என்றார்.

மேலும் அவர் தான் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் இருந்த மதிலில் மோதியதாக கூறினார்.

வழமையாக அலுவலக ஊழியர் இயலுமான நோயாளர்களை கட்டிலில் இருந்து எழுப்பியே என்னை பரிசோதிக்க அனுமதிப்பார்.

இவர் எழும்ப பின்னடித்ததை அடுத்து அவரது மருத்துவ குறிப்பேட்டினை பார்வையிட்டேன். அதில் விபத்தின் போது அவரது விதைகள் இரண்டும் (Crush injury) கடுமையாக நசிவடைந்து பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டியிருந்தார்கள்.

அண்மைக்காலமாக குறிப்பிட்டவகை மோட்டார் சைக்கிளினை (Yamaha FZ and Pulsar models) பாவிக்கும் இளைஞர்கள் வீதிவிபத்துகளின் பொது மேற்குறிப்பிட்ட வகையான காயங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதை அவதானித்து வருகின்றேன்.

இங்கு விதைப்பையில் அல்லது அதனை அண்டிய பிரதேசத்தில் ஏற்படும் காயம் ஆனது சாதாரண உரஞ்சல் காயத்தில் (Simple abrasion) இருந்து பாரதூரமான கிழியல் (Degloving laceration) காயம் வரை காணப்படும்.

இவ்வகையான காயங்கள் straddle injuries (trauma occurs to the groin area between the thighs) என்றழைக்கபடும். ஏற்படும் பாரதூரமான காயத்தினால் விதைப்பைகள் அகற்றப்பட்ட சம்பவங்களும் உண்டு.

மேலும் ஏற்பட்ட சாதாரண காயத்தினால் இளைஞர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு இல்லற வாழ்வினை பின்தள்ளி போட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

மேற்படி வகை மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இவ்வகையான காயம் ஏற்படாது.

குறிப்பாக சைக்கிளோட்டி தூக்கி எறியப்பட்டால் இவ்வகையான காயம் ஏற்படாது.

சாதாரணமாக சைக்கிளோட்டியின்வேகம் மோட்டார் சைக்கிளின் வேகத்திற்கு சமனாக இருக்கும். விபத்தின் பொது சடுதியாக மோட்டார் சைக்கிளின் வேகம் பூச்சியமாகும் போது மோட்டார் சைக்கிளோட்டியினை நோக்கி விசை ஒன்று தாக்கும் (பச்சை நிற அம்புக்குறி ) இதன் காரணமாக இவ்வகையான காயம் ஏற்படுகின்றது.