யாழில் மூதாட்டியை கட்டிவைத்துவிட்டு கொள்ளை!!

நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் சங்கிலி , தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார்.

அவரின் வீட்டு கூரையை பிரித்து நேற்று அதிகாலை உட்புகுந்த கொள்ளை கும்பல்ஒன்று மூதாட்டியை தாக்கி , அவரின் முகத்தை துணியால் கட்டி அவரை அங்கிருந்த கதிரை ஒன்றில் கட்டி வைத்து விட்டு அவர் அணிந்திருந்த சங்கிலி , தோடு என்பவற்றை அபகரித்ததுடன் , வீட்டினுள் தேடுதல் நடத்தில் வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 3 கையடக்க தொலைபேசி என்பவற்றையும் கொள்ளையிட்டு தப்பி சென்று உள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பி சென்ற பின்னர் மூதாட்டியின் அவல குரல் கேட்டு அயலவர்கள் சென்று மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த சண்முகநாதன் நித்தியலட்சுமி (வயது 70) என்பவரே காயமடைந்தார்.

அதேவேளை தனக்கு 17 வயதிருக்கும் போது தந்தை தோடுகளை வாங்கி தந்ததாகவும் , தாய் சங்கிலியை வாங்கி தந்ததாகவும் , அவற்றையே இதுவரை காலம் அணிந்து இருந்த போது அவற்றை கொள்ளையர்கள் அபகரித்து சென்று விட்டனர் என கண்ணீர் மல்க சாவகச்சேரி பொலிஸரிடம் முறையிட்டு உள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.